இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்! லோக்சபாவில் எதிர்க்கட்சிகள் அமளி! ராஜ்யசபாவில் காரசார விவாதம்!
காலை 11 மணிக்கு வழக்கம் போல் லோக்சபா கூடியதும், எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அவர்களை அமைதி காக்கும் படி சபாநாயகர் ஓம் பிர்லா வலியுறுத்தினார்.
இந்த ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார். லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. ஆனால் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு சபையை முடக்கி வருகின்றனர்.
நேற்று மாலை பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவித்து லோக்சபாவில் உரையாற்ற திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் எதிர்க்கட்சிகளின் தொடர் கோஷங்களும் அமளியும் காரணமாக சபை ஒத்திவைக்கப்பட்டது. பிரதமரின் உரை நடைபெறாமல் போனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்து விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் எம்பி மணீஷ் திவாரி ஒத்திவைப்பு தீர்மானம் முன்மொழிந்தார். கேள்வி நேரம் உள்ளிட்ட அனைத்து திட்டமிட்ட நடவடிக்கைகளையும் ஒத்திவைத்து, முதலில் வர்த்தக ஒப்பந்தம் பற்றி விவாதிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: காங், கம்யூனிஸ்ட் சிக்கிட்டாங்க! திமுக எம்பிக்கள் தப்பியது எப்படி? சஸ்பெண்ட் பட்டியலால் அதிமுக சந்தேகம்!
இன்று காலை 11 மணிக்கு லோக்சபா கூடியதும் எதிர்க்கட்சி எம்பிக்கள் மீண்டும் கடும் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகர் ஓம் பிர்லா அமைதி காக்குமாறு பலமுறை வலியுறுத்தினார். ஆனால் எதிர்க்கட்சியினர் தங்கள் கோரிக்கையை ஏற்க வேண்டும் என்று கூறி தொடர்ந்து கோஷமிட்டனர். சபையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டதால், சபாநாயகர் நடவடிக்கைகளை பகல் 12 மணி வரை ஒத்திவைத்து அறிவித்தார்.
ராஜ்யசபாவிலும் பதற்றம் நீடித்தது. லோக்சபாவில் எதிர்க்கட்சித் தலைவருக்கு பேச அனுமதி இல்லை என்று கூறி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ராஜ்யசபாவில் பேசினார். இது முறையல்ல என்று துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் அறிவுறுத்தினார். ஆனால் கார்கே தொடர்ந்து ஒரே விஷயத்தை திரும்பத் திரும்ப பேசினார். இதற்கு மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா மற்றும் கிரண் ரிஜிஜு பதிலளித்தனர். இதனால் ராஜ்யசபாவிலும் காரசார விவாதம் நடைபெற்றது.
எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் சில நாட்களே சபை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. வர்த்தக ஒப்பந்தம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்களில் விவாதம் நடத்த வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கை தொடர்ந்து எழுந்து வருகிறது.
ஆளும் கட்சி இதை எதிர்க்கட்சிகளின் தடாலடி உத்தி என்று விமர்சிக்கிறது. பட்ஜெட் விவாதங்கள் மற்றும் முக்கிய சட்டங்களை நிறைவேற்றுவதற்கு இந்த அமளி பெரும் தடையாக உள்ளது. அடுத்த சில நாட்களில் சபை இயல்பு நிலைக்கு திரும்புமா என்பது அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 8 எம்.பி-க்கள் சஸ்பெண்ட் விவகாரம்! பார்லி-யில் அமளி!! மக்களவை ஒத்திவைப்பு! எம்.பிக்கள் போராட்டம்!