எரிவாயு தட்டுப்பாட்டிற்கு விடிவுகாலம்! ஹார்முஸ் நீரிணையை தாண்டி குஜராத் வந்தது 'சிவாலிக்' கப்பல்!
ஈரான் அரசுடன் உரிய முறையில் பேச்சுவார்த்தை நடத்தியதால் இந்திய எண்ணெய் கப்பல்களால் ஹோர்முஸ் நீரிணையை கடக்க முடிந்தது என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து.
மேற்காசியாவில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யும் ஒரு முக்கிய நிகழ்வாக, சுமார் 45,000 மெட்ரிக் டன் சமையல் எரிவாயுவை (LPG) ஏற்றிக்கொண்டு 'சிவாலிக்' (Shivalik) சரக்குக் கப்பல் இன்று மாலை குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தை வந்தடைந்தது. ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ள போர் அபாயம் நிறைந்த ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) பாதுகாப்பாகக் கடந்து வந்த இந்தக் கப்பல், இந்தியாவில் நிலவி வரும் கடும் எரிவாயு தட்டுப்பாட்டிற்குப் பெரும் மருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த இரண்டு வாரங்களாக ஈரான் மற்றும் இஸ்ரேல்-அமெரிக்கா இடையேயான மோதலால் ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டிருந்தது. இதனால் இந்தியாவின் சமையல் எரிவாயு விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனைத் தீர்க்க, வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் ஈரான் அரசுடன் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்தக் கப்பலின் வருகை குறித்துப் பேசிய அமைச்சர் ஜெய்சங்கர், நாங்கள் எதுவும் செய்யாமல் அமைதியாக இருந்திருந்தால் இந்த அதிசயம் நடந்திருக்காது. ஈரானுடன் நேருக்கு நேர் பேச்சுவார்த்தை நடத்தி, இந்தியக் கப்பல்களுக்குப் பாதுகாப்பான பாதையை உறுதி செய்ததாலேயே இது சாத்தியமானது. இது ராஜதந்திரத்திற்குத் தகுந்த பலன் கிடைத்துள்ளதைக் காட்டுகிறது எனப் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: எரிவாயு தட்டுப்பாட்டிற்கு தீர்வு! ஹார்மூஸ் ஜலசந்தியை கடந்த இரு இந்திய LPG கப்பல்கள்!
இந்தியாவில் கடந்த சில நாட்களாக LPG சிலிண்டர்களுக்குப் கடும் தட்டுப்பாடு நிலவி வந்தது. தற்போது வந்துள்ள 45,000 மெட்ரிக் டன் எரிவாயு மூலம் சுமார் 33 லட்சம் சிலிண்டர்களை நிரப்ப முடியும். நாளை 'நந்தா தேவி' (Nanda Devi) என்ற மற்றொரு கப்பலும் வரவுள்ளது. இவ்விரு கப்பல்களின் வருகை எரிவாயு தட்டுப்பாட்டை 30% வரை குறைக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முந்த்ரா துறைமுகத்தில் இந்தக் கப்பலில் இருந்து எரிவாயுவை இறக்கத் தேர்தல் ஆணையத்தின் சிறப்பு அனுமதியுடன் முன்னுரிமை பெர்த் வழங்கப்பட்டுள்ளது. இங்கிருந்து உடனடியாக லாரிகள் மூலம் கேஸ் சிலிண்டர் நிரப்பும் நிலையங்களுக்கு எரிவாயு கொண்டு செல்லப்படும்.
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையிலும், இந்தியக் கப்பல்களுக்கு மட்டும் ஈரான் சிறப்பு அனுமதி வழங்கியது சர்வதேச அளவில் இந்தியாவின் செல்வாக்கை நிரூபிப்பதாகக் கருதப்படுகிறது.
இதையும் படிங்க: மத்திய அரசு என்ன செய்ய போகிறது? சிலிண்டர் தட்டுப்பாட்டில் பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் நேரடி கேள்வி!