×
 

ஆபரேஷன் சிந்தூர் குறித்து சர்ச்சை பேச்சு... ம.பி துணை முதல்வருக்கு பெரிய சிக்கல்!!

ஆபரேஷன் சிந்தூர் குறித்து மத்திய பிரதேச துணை முதல்வர் ஜகதீஷ் தேவ்தா பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

காஷ்மீரில் கடந்த 22 ஆம் தேதி பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அங்கு இருந்த சுற்றுலாப் பயணிகள் சுமார் 26 பேர் கொல்லப்பட்டனர். இதை அடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியான முடிவுகள் எடுக்கப்பட்டன. இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வந்தது. இந்த சூழலில் இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது. இந்த தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.  இந்த நிலையில் 'ஆபரேஷன் சிந்தூர் குறித்து மத்திய பிரதேச மாநில துணை முதலமைச்சர் ஜகதீஷ் தேவ்தா கூறிய கருத்து பெரும் சர்ச்சையாகியுள்ளது.

அவர் பேசுகையில், நாம் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். ஒட்டுமொத்த தேசமும், ராணுவமும், ராணுவ வீரர்களும் பிரதமரின் காலடியில் விழுந்தனர். ஒட்டுமொத்த தேச மக்களும் பிரதமரின் காலடியில் கிடந்தனர் என்று தெரிவித்தார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்த மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் கமிட்டி, உடனடியாக ஜகதீஷ் தேவ்தா துணை முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளது. இதுக்குறித்த  மத்திய பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் எக்ஸ் சமூக வலைதள பதிவில், ஒட்டுமொத்த தேசமும், ராணுவமும் பிரதமர் மோடியின் காலடியில் விழுந்ததாக ஜகதீஷ் தேவ்தா கூறுகிறார்.

இதையும் படிங்க: ஆபரேஷன் சிந்தூர் பெயர் வைத்ததே இவர் தான்... உண்மையை உடைத்த ராஜ்நாத் சிங்!!

இவர் பாஜக ஆளும் மத்திய பிரதேச மாநிலத்தின் துணை முதலமைச்சர். ஒரு மாநிலத்தின் துணை முதலமைச்சர் இவ்வாறு கூறுவது அர்ப்பத்தனமானது, வெட்கக்கேடானது. இது நமது ராணுவ வீரர்களின் வீரத்திற்கும் தைரியத்திற்கும் இழுக்கு. ஒட்டுமொத்த தேசமும் ராணுவ வீரர்களை எண்ணி பெருமைப்படும் போது அவர்களை பாஜக இவ்வாறு சிறுமைப்படுத்துகிறது. இதற்காக பாஜகவும் ஜகதீஷ் தேவ்தாவும் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும். மேலும் பாஜக ஆட்சியில் இருந்து விலக வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.

காங்கிரஸ் தலைவரும், வயநாடு எம்.பியுமான பிரியங்கா காந்தி, பாஜக தலைவர்கள் நமது ராணுவத்தை தொடர்ந்து அவமதிப்பது மிகவும் வெட்கக்கேடானது மற்றும் துரதிர்ஷ்டவசமானது என்று விமர்சித்துள்ளார். இந்த சர்ச்சையைத் தொடர்ந்து தான் தெரிவித்த கருத்து ஜகதீஷ் தேவ்தா விளக்கம் அளித்துள்ளார். அதில், எனது பேச்சை காங்கிரஸ் கட்சி திரித்து, தவறான வழியில் வெளியிடுகிறது. எனது கருத்து தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது. ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் நமது ராணுவம் மிகப்பெரிய சேவையை ஆற்றியதாகத்தான் நான் கூறினேன். ராணுவத்தை இந்திய மக்கள் பணிந்து வணங்கியதாகவும் குறிப்பிட்டேன் என்று விளக்கம் அளித்துள்ளார்.

இதையும் படிங்க: இந்தியா பக்கம் சாய்ந்த இஸ்ரேல்... வெற்றிக்கு பாரட்டியதோடு துணை நிற்போம் என உறுதி!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share