பள்ளிகளில் புகையிலை பொருள் தடுப்பு! தமிழக அரசுக்கு ஐகோர்ட் மதுரை கிளை முக்கிய உத்தரவு!
பள்ளிகளில் புகையிலை இல்லாத கல்வி நிறுவன வழிகாட்டுதல்களை செயல்படுத்த உத்தரவிட கோரிய வழக்கில் பதில்மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களில் ராகிங் கொடுமைகள் கட்டுப்படுத்தப்பட்டது போல, மாணவர்களிடையே புகையிலை மற்றும் போதைப் பொருட்கள் பயன்பாட்டைத் தடுப்பதற்கு மாவட்ட இலவச சட்ட உதவி மையங்களுடன் (DLSA) இணைந்து பணியாற்ற வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து அரசுத் தரப்பு பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த மணிபாரதி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், குட்கா, பான் பராக், பான் மசாலா மற்றும் கூல் லிப் போன்ற புகையிலைப் பொருட்களில் 4,000-க்கும் மேற்பட்ட கொடிய வேதிப்பொருட்கள் உள்ளன.
இவற்றில் 40-க்கும் மேற்பட்டவை புற்றுநோயை உண்டாக்கக்கூடியவை. நிக்கோட்டின் கலந்த இத்தகைய பொருட்களைப் பயன்படுத்துவதால் வாய் புற்றுநோய், நுரையீரல் பாதிப்பு, இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் மிக அதிகமாக உள்ளது. தமிழகத்தில் தடை செய்யப்பட்டிருந்தாலும் பள்ளிகளுக்கு அருகே உள்ள சிறு கடைகளில் இவை எளிதாகக் கிடைக்கின்றன.
இதையும் படிங்க: கடை தேங்காயை எடுத்து வழி பிள்ளையாருக்கு! விஜயின் கார் அறிவிப்பை சாடிய டிடிவி தினகரன்!
எனவே, பள்ளிகளில் 'புகையிலையற்ற கல்வி நிறுவன வழிகாட்டுதல்களை' முழுமையாகச் செயல்படுத்தவும், தென் மாவட்டங்களில் புகையிலை தடுப்பு மையங்களை அமைத்து உளவியல் நிபுணர்களை நியமிக்கவும், மாணவர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை வாய்வழி மற்றும் பல் சுகாதாரப் பரிசோதனை நடத்தவும் உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன் மற்றும் ஆர். சக்திவேல் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பள்ளி கல்வித்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த விவகாரம் குறித்து விரிவான பதில்மனு தாக்கல் செய்யக் கூடுதல் கால அவகாசம் வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.
இதனைப் பரிசீலித்த நீதிபதிகள், பள்ளி மற்றும் கல்லூரிகளில் ராகிங் நடைமுறைகள் எவ்வாறு சட்டப்பூர்வமாகத் தடுத்து நிறுத்தப்பட்டனவோ, அதேபோன்று போதைப் பொருட்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த மாவட்ட இலவச சட்ட உதவி மையங்களுடன் பள்ளிக் கல்வித்துறை கைகோர்க்கும் சாத்தியக்கூறுகள் குறித்து அரசுத் தரப்பு விளக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.
மேலும், பள்ளி கல்வித்துறை விரிவான பதில்மனுவைத் தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கி, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கு! ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!