மதுரை எய்ம்ஸ் ஆகஸ்ட்டில் திறப்பு..? பணிகளை முடிக்க மும்முரம்... எகிறும் எதிர்பார்ப்பு..!!
வரும் ஆகஸ்ட் மாதம் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை திறக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதியில் உள்ள தோப்பூர் அருகே கோ.புதுப்பட்டியில் 220 ஏக்கர் பரப்பளவில் உலகத் தரம் வாய்ந்த எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி வளாகம் வேகமாக உருவாகி வருகிறது. முதற்கட்ட கட்டுமானப் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில், வருகிற ஆகஸ்ட் மாத இறுதியில் மருத்துவக் கல்லூரி வளாகம் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்த திட்டத்துக்கு ரூ.2,021.51 கோடி செலவிடப்படுகிறது. ஜப்பான் நாட்டின் ஜைக்கா (JICA) நிறுவனத்தின் நிதியுதவியுடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 2019 ஜனவரி 27 அன்று பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினாலும், கட்டுமானப் பணிகள் 2024 மே 22 அன்றுதான் தொடங்கின. மொத்த கட்டுமானத்தை 33 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது 2027 பிப்ரவரிக்குள் முழு வளாகமும் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் கட்டத்தில் மருத்துவக் கல்லூரி, நர்சிங் கல்லூரி, நிர்வாக அலுவலகம், புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட 13 கட்டிடங்கள் கட்டப்படுகின்றன. இரண்டாம் கட்டத்தில் கலையரங்கம், குடியிருப்புகள், மருத்துவமனை இயக்குநர் பங்களா, ஆயுஷ் மருத்துவப் பிரிவு உள்ளிட்ட 16 கட்டிடங்கள் வருகின்றன. மொத்தம் 24 முதல் 29 கட்டிடங்கள் இந்த வளாகத்தில் அமையும். உலகளாவிய தரநிலைகளுக்கு ஏற்ப நீடித்த நிலைத்தன்மை அம்சங்களுடன், நோயாளிகளுக்கு அனைத்து நவீன வசதிகளும் இங்கு இடம்பெறும். 900 படுக்கை வசதிகளுடன் கூடிய மருத்துவமனையில் தொற்றுநோய் சிகிச்சைக்கென தனியாக 150 படுக்கைகள் ஒதுக்கப்படும்.
இதையும் படிங்க: பழமுதிர்சோலை முருகன் கோயில் கும்பாபிஷேகம்!! வெற்றிவேல்!! வீர வேல்!! பக்தர்கள் சரண கோஷம்!
தற்போது மருத்துவக் கல்லூரி, விடுதி வளாகம், ஆய்வகங்கள், வெளிநோயாளிகள் பிரிவு, குடியிருப்புகள், விளையாட்டு மைதானம், 750 இருக்கைகள் கொண்ட கூட்ட அரங்கம் உள்ளிட்ட முதற்கட்ட அமைப்புகளின் பணிகள் முடிவடையும் நிலையை எட்டியுள்ளன. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இரவு பகலாகப் பணியாற்றி வருகின்றனர். முதற்கட்ட கட்டுமான பணிகள் 90% நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்த மாதம் மதுரை எய்ம்ஸ் திறக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. மீதமுள்ள கட்டுமான பணிகளை விரைவில் முடிக்க அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க: ரத்தம் தெறிக்க, தெறிக்க கொடூரம்.. ஜாமீனில் வெளியே வந்த இளைஞர் சரமாரியாக வெட்டி சாய்ப்பு...!