×
 

வங்கதேச நிலநடுக்கம்...! கொல்கத்தாவில் வலுவான நில அதிர்வு... பீதியில் மக்கள்!

வங்கதேசத்தில் இன்று மதியம் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் எதிரொலியாக கொல்கத்தா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த நில அதிர்வு உணரப்பட்டது.

மேற்கு வங்க மாநிலத் தலைநகர் கொல்கத்தா மற்றும் அதன் அண்டை மாவட்டங்களில் இன்று பிற்பகல் வலுவான நில அதிர்வு உணரப்பட்டது. வங்கதேசத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் எதிரொலியாக இந்த அதிர்வுகள் ஏற்பட்டதால், கொல்கத்தாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் அலுவலகங்களில் இருந்த மக்கள் பீதியடைந்து தெருக்களில் தஞ்சமடைந்தனர்.

இன்று மதியம் சரியாக 1:22 மணி அளவில் நில அதிர்வு உணரப்பட்டது. ரிக்டர் அளவில் இது 5.4 முதல் 5.5 ஆகப் பதிவாகியுள்ளது. (தேசிய நில அதிர்வு மையத்தின் கணக்குப்படி 5.5). இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி வங்கதேசத்தின் நயாபஜார் (Nayabazar) பகுதியில், பூமிக்கு அடியில் சுமார் 10 கி.மீ ஆழத்தில் நிலைகொண்டிருந்தது. இது கொல்கத்தாவிலிருந்து சுமார் 100 கி.மீ தொலைவில் இந்திய-வங்கதேச எல்லையை ஒட்டி அமைந்துள்ளது.

சுமார் 10 முதல் 15 வினாடிகள் வரை இந்த அதிர்வு நீடித்தது. நகரின் முக்கிய இடங்களான சால்ட் லேக் (Salt Lake) ஐடி பூங்கா, தலைமைச் செயலகமான 'நபன்னா' மற்றும் சட்டமன்ற வளாகத்தில் இருந்த அரசு ஊழியர்கள் அனைவரும் உடனடியாகக் கட்டடங்களை விட்டு வெளியேறினர். வீடுகளில் இருந்த மின்விசிறிகள், தண்ணீர் பாட்டில்கள் மற்றும் சோபாக்கள் லேசாக அதிர்ந்ததாகப் பொதுமக்கள் தெரிவித்தனர். அதிர்ஷ்டவசமாக, இந்த நிலநடுக்கத்தால் கொல்கத்தாவிலோ அல்லது மேற்கு வங்கத்தின் பிற பகுதிகளிலோ உயிர்ச்சேதமோ அல்லது பெரிய அளவிலானக் கட்டடப் பாதிப்புகளோ ஏற்பட்டதாக இதுவரைத் தகவல்கள் இல்லை.

இதையும் படிங்க: வங்கதேசத்தின் புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் பதவியேற்பு ...! 17 ஆண்டுக்கு பிறகு பிஎன்பி ஆட்சி!

இன்றைய தினம் மதியம் சிக்கிம் மாநிலத்தின் நாம்கி (Namchi) பகுதியிலும் 2.7 ரிக்டர் அளவில் ஒரு சிறிய நில அதிர்வு பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. வளிமண்டலக் கீழடுக்கு சுழற்சியால் மழை பெய்து வரும் வேளையில், இந்தத் திடீர் நிலநடுக்கம் கொல்கத்தா மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: வங்கதேசம்: நாளை நாடாளுமன்ற தேர்தல்..!! நிலவும் பதற்றம்..!! கள நிலவரம் என்ன..??

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share