மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல்: மும்பை மாநகராட்சியை கைப்பற்றப்போவது யார்..?? விறுவிறு வாக்குப்பதிவு..!!
மஹாராஷ்டிராவில், மும்பை, புனே உட்பட, 29 மாநகராட்சிகளுக்கு இன்று உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது.
மஹாராஷ்டிரா மாநிலத்தில், மும்பை, புனே, நாக்பூர் போன்ற முக்கிய நகரங்களை உள்ளடக்கிய 29 மாநகராட்சிகளுக்கு இன்று உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. ஆசியாவின் மிகப் பெரிய பொருளாதார வலிமை கொண்ட மும்பை மாநகராட்சியை கட்டுப்படுத்தும் போட்டியில் அரசியல் கட்சிகள் கடும் போராட்டம் நடத்தி வருகின்றன.
வாக்குப்பதிவு இன்று காலை 7.30 மணிக்குத் தொடங்கி, மாலை 5.30 மணி வரை தொடரும். நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மாநிலத்தில் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பாஜக-சிவசேனா-தேசியவாத காங்கிரஸ் (என்.சி.பி.) அடங்கிய மஹாயுதி கூட்டணி ஆட்சியில் உள்ளது. கடந்த டிசம்பரில் நடந்த 246 நகராட்சிகள் மற்றும் 42 நகர பஞ்சாயத்துகள் உள்ளிட்ட 288 உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தலில், 200க்கும் அதிகமான இடங்களை கைப்பற்றி மஹாயுதி கூட்டணி வெற்றி பெற்றது.
இந்த வெற்றி அடிப்படையில், தற்போதைய தேர்தலிலும் கூட்டணி தனது ஆதிக்கத்தை தக்க வைக்க முயற்சிக்கிறது.இத்தேர்தலில் குறிப்பிடத்தக்க மாற்றமாக, 20 ஆண்டுகளாக எதிரிகளாக இருந்த உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா (யு.பி.டி.) மற்றும் ராஜ் தாக்கரே தலைமையிலான மஹாராஷ்டிரா நவநிர்மாண் சேனா (எம்.என்.எஸ்.) இணைந்து கூட்டணி அமைத்துள்ளன. மேலும், துணை முதலமைச்சர் அஜித் பவார் சில தொகுதிகளில் சரத் பவார் தலைமையிலான என்.சி.பி. உடன் கைகோர்த்துள்ளார்.
இதையும் படிங்க: அனைவருக்கும் நல்ல ஆரோக்கியமும், நலமும் கிடைக்கட்டும்..!! பிரதமர் மோடி பொங்கல் வாழ்த்து..!!
இந்த கூட்டணிகள் தேர்தலின் போக்கை மாற்றக்கூடியவை.இந்த 29 மாநகராட்சிகளில் மொத்தம் 2,869 உறுப்பினர் இடங்கள் உள்ளன. இவற்றுக்கு 15,931 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மும்பை மட்டும் 1,700 வேட்பாளர்களைக் கொண்டுள்ளது. மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 3.48 கோடி. வாக்குப்பதிவு சீராக நடைபெறுவதற்காக, மும்பை உள்ளிட்ட நகரங்களில் கடும் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் விதிமுறைகளை மீறியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இத்தேர்தல் முடிவுகள் மஹாராஷ்டிரா அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மும்பை மாநகராட்சியின் பொருளாதார முக்கியத்துவம் காரணமாக, அனைத்துக் கட்சிகளும் வாக்காளர்களை ஈர்க்கும் வகையில் வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளன. நகர வளர்ச்சி, போக்குவரத்து, சுகாதாரம் போன்ற பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி பிரசாரம் நடைபெற்றது. வாக்காளர்களின் பங்கேற்பு விகிதம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: சீறிப்பாயும் காளைகள்..!! அடக்கும் வீரர்கள்..!! அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி கோலாகல தொடக்கம்..!!