×
 

நாசிக் ஐ.டி., நிறுவன மதமாற்ற விவகாரம்! இளம்பெண்களை கட்டாய மூளைச்சலவை செய்தது அம்பலம்!

மஹாராஷ்டிராவின் ஐ.டி., நிறுவனத்தில் மதமாற்றம் நடந்ததாக கூறப்படும் வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில், இஸ்லாமிய வீடியோக்களை காண்பித்து, இளம்பெண்களை கட்டாய மதமாற்றம் செய்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மஹாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் செயல்பட்டு வந்த ஒரு தனியார் ஐ.டி. நிறுவனத்தின் பி.பி.ஓ. பிரிவில் பணியாற்றிய சில பெண் ஊழியர்கள் கட்டாய மதமாற்றம் மற்றும் பாலியல் தொந்தரவு தொடர்பாக அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகை புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

18 முதல் 23 வயதுக்குட்பட்ட இளம்பெண்கள் சிலர், தங்களுடன் பணியாற்றிய சில சக ஊழியர்கள் மதம் மாறுமாறு தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததாகவும், அதற்கு இணங்காதவர்களுக்கு பாலியல் ரீதியான தொந்தரவுகள் ஏற்பட்டதாகவும் கடந்த பிப்ரவரி மாதம் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

விசாரணையின் ஒரு பகுதியாக நிறுவனத்தில் ரகசிய ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்னர், டேனிஷ் ஷேக், தவுசிப் அத்தார், நிடா கான் உள்ளிட்ட எட்டு பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் நிறுவன ஊழியர்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ஐ.டி நிறுவனத்தில் அரங்கேறிய மதமாற்றம், பாலியல் அத்துமீறல்!! 25 நாட்களாக தலைமறைவாக இருந்த கும்பல் தலைவி கைது!

நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ள ஒரு பெண்ணின் வாக்குமூலத்தில், தனிப்பட்ட மனஅழுத்த சூழ்நிலையை பயன்படுத்தி சிலர் தன்னை மதம் மாற்றும் நோக்கில் தொடர்ந்து பேசியதாக கூறப்பட்டுள்ளது. மேலும், குறிப்பிட்ட மத போதகர்களின் வீடியோக்களை பார்க்க வற்புறுத்தப்பட்டதாகவும், அந்த மதத்தின் நம்பிக்கைகள் மற்றும் கருத்துகள் குறித்து தொடர்ந்து விளக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோல், திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றியதாகவும், பின்னர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் தற்போது விசாரணையின் கீழ் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கு மாநிலம் முழுவதும் கவனம் பெற்றுள்ள நிலையில், தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் குறித்து நீதிமன்ற விசாரணை தொடர உள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் இன்னும் நிரூபிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தர்பூசணியில் கலந்திருந்த எலிமருந்து!! ஒரே குடும்பத்தில் 4 பேர் மரணத்தில் விலகியது மர்மம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share