பெங்காலியில் பேசுறோம்.. அதுக்காக நாங்க இந்தியர்கள் இல்லையா..?? மக்கள் மத்தியில் கொந்தளித்த மம்தா பானர்ஜி..!!
பெங்காலி மொழியில் பேசுவதால் நாங்கள் இந்தியர்கள் இல்லையா? என்று மம்தா பானர்ஜி ஆவேசமாக பேசியுள்ளார்.
மேற்கு வங்காள முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) தலைவருமான மம்தா பானர்ஜி, கேஷியாரியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பாஜகவை கடுமையாக விமர்சித்தார். 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்.ஐ.ஆர்) காரணமாக மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மம்தா பானர்ஜி கூறுகையில், “இந்த எஸ்.ஐ.ஆர் பணியால் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பலர் பயம், மன அழுத்தம் மற்றும் குடியுரிமை நிரூபண சிரமங்களால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்துகொண்டதாகவும், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், வாக்காளர் பட்டியலில் இருந்து சுமார் 90 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 60 லட்சம் இந்துக்கள் மற்றும் 30 லட்சம் முஸ்லிம்கள் என்ற அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். (டிஎம்சியின் உள் பகுப்பாய்வின்படி, நீக்கப்பட்டோரில் இந்துக்கள் சுமார் 63% மற்றும் முஸ்லிம்கள் 34% என்ற விகிதத்தில் உள்ளனர்).
இதையும் படிங்க: காங்கிரசுக்கு யாரும் பாடம் எடுக்க தேவையில்லை..!! மம்தா பானர்ஜி பேச்சுக்கு மாணிக்கம் தாகூர் கடும் தாக்கு..!!
“பெங்காலி மொழியில் பேசுவதாலேயே நாங்கள் இந்தியர்கள் இல்லையா? எங்கள் குடியுரிமையை தொடர்ந்து நிரூபித்துக்கொண்டே இருக்க வேண்டுமா?” என்று உணர்ச்சிபூர்வமாகக் கேள்வி எழுப்பினார். இந்த திருத்தப் பணி மக்களின் அடிப்படை உரிமைகளை பறிப்பதாகவும், தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் பாஜக இதை அரசியல் நோக்கத்துடன் செயல்படுத்துவதாகவும் அவர் விமர்சித்தார்.
மாநிலத்தில் உள்ள எல்லைப் பகுதிகள் மற்றும் சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் மாவட்டங்களில் (முர்ஷிதாபாத், மால்டா, வட 24 பர்கானா உள்ளிட்டவை) இந்த நீக்கங்கள் அதிகம் இருப்பதாகவும், இது ஜனநாயகத்துக்கு எதிரான செயல் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும், பவானிபூர் தொகுதியில் தனது வேட்பு மனுவை ரத்து செய்யும் நோக்கில், தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் பாஜக இரண்டு பொய் வழக்குகளை தொடர முயன்றதாக மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார்.
“ஆனால், திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களின் உறுதியான முயற்சியால் அந்த சதி முறியடிக்கப்பட்டது” என்று அவர் தெரிவித்தார். இந்த சம்பவம் தனக்கு எதிரான அரசியல் சதியின் ஒரு பகுதி என்றும், அவர் சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்று போராடுவார் என்றும் அவர் உறுதிப்படுத்தினார். இந்த பிரசாரத்தில் மம்தா பானர்ஜி, “இது மக்களின் உயிர்வாழ்வுக்கான போர். பாஜகவின் அதிகார கைப்பற்றும் முயற்சியை முறியடித்து, டிஎம்சி வெற்றி பெறும்” என்று உற்சாகமூட்டினார். வாக்காளர் பட்டியல் திருத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட உதவி வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
இந்த எஸ்.ஐ.ஆர் பணியால் மாநில வாக்காளர் எண்ணிக்கை சுமார் 11-12% குறைந்துள்ளது. தேர்தல் ஆணையம் இதை வாக்காளர் பட்டியலை சுத்தப்படுத்தும் நடவடிக்கை என்று விளக்கினாலும், எதிர்க்கட்சிகள் இதை அரசியல் சதியாக பார்க்கின்றன. மம்தாவின் இந்த பேச்சு, 2026 தேர்தலில் வாக்காளர் உரிமை, ஜனநாயக நியாயம் ஆகியவற்றை மையப்படுத்திய பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படலாம், எச்சரிக்கை! மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி அதிரடி அறிவுறுத்தல்!