செத்துட்டாருனே நினைச்சோம்!! 28 வருசமா காணல!! எஸ்.ஐ.ஆர் பணியால் திரும்ப கிடைத்த நபர்!!
உத்தர பிரதேசத்தில், 28 ஆண்டுகளுக்கு முன் இறந்ததாக கருதப்பட்ட நபர், சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட, எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி வாயிலாக, உயிரோடு இருப்பது தெரிய வந்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
முசாபர்நகர்: உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டம் கடவுலி பகுதியில் நடந்த அதிசய சம்பவம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. 28 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டதாக கருதப்பட்ட அஹமது ஷெரீப் என்ற 79 வயது முதியவர் உயிரோடு இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த அதிசயம் தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்.ஐ.ஆர்.) காரணமாக நிகழ்ந்துள்ளது.
அஹமது ஷெரீப் தனது முதல் மனைவி இறந்த பிறகு 1997ஆம் ஆண்டு இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். புதிய மனைவியுடன் மேற்கு வங்க மாநிலத்துக்கு சென்று குடியேறினார். அப்போது உத்தர பிரதேசத்தில் இருந்த உறவினர்களுடன் போனில் அவ்வப்போது தொடர்பு கொண்டு வந்தார். ஆனால், காலப்போக்கில் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டது. மேற்கு வங்கத்தில் அவர் தங்கியிருந்த முகவரியை தொடர்பு கொள்ள முடியாததால், உறவினர்கள் ஷெரீப் இறந்துவிட்டார் என்று நம்பினர்.
சமீபத்தில் மேற்கு வங்கத்தில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின்போது ஷெரீப்பிடம் பழைய ஆவணங்கள் கேட்கப்பட்டன. அந்த ஆவணங்களை பெறுவதற்காக அவர் சொந்த ஊரான கடவுலிக்கு வந்தார்.
இதையும் படிங்க: வெறிநாய் கடித்து எருமை பலி!! எருமை பால் குடித்த மக்கள் பீதி! மருத்துவமனையில் குவியும் கூட்டம்!
திடீரென ஷெரீப் வீடு திரும்பியது குடும்ப உறுப்பினர்களுக்கும் உறவினர்களுக்கும் பெரும் ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. 28 ஆண்டுகளுக்குப் பிறகு உயிரோடு திரும்பிய அவரை கண்டு குடும்பத்தினர் கண்ணீர் மல்க அணைத்துக்கொண்டனர்.
இதுகுறித்து அஹமது ஷெரீப் பேசுகையில், “என் இரண்டாவது திருமணம் நடந்த சமயத்தில் தகவல் தொடர்பு வசதிகள் மிகக் குறைவாகவே இருந்தன. அதனால் குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ள முடியவில்லை. இப்போது வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்காக ஆவணங்கள் தேவைப்பட்டதால் சொந்த ஊருக்கு வந்தேன். குடும்ப உறுப்பினர்களை சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.
தேர்தல் ஆணையத்தின் இந்த தீவிர திருத்தப் பணி வாக்காளர் பட்டியலை சுத்தப்படுத்துவதோடு, இதுபோன்ற அதிசய சம்பவங்களையும் வெளிக்கொண்டு வருவதாக அமைந்துள்ளது. ஷெரீப்பின் திரும்பி வருகை அக்கிராம மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நாடே பேரதிர்ச்சி... ஒரே மாநிலத்தில் இருந்து 2.89 கோடி வாக்காளர்கள் நீக்கம்... SIR கொடுத்த ஷாக்...!