×
 

மணிப்பூரில் மீண்டும் கலவரம்... இருதரப்பினர் இடையே துப்பாக்கிச்சூடு... கிடுகிடுவென உயரும் பலி எண்ணிக்கை....!

முல்லம் மற்றும் சோங்பால் கிராமங்களில் வீடுகள் தீயிட்டு எரிக்கப்பட்டதோடு இருதரப்பினரிடையே நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அப்பகுதியை போர்க்களமாக மாற்றியுள்ளன.

மணிப்பூரின் உக்ரோல் மாவட்டத்தில் குக்கி மற்றும் நாகா பழங்குழியினர் இடையே ஏற்பட்ட கடும் மோதல் தற்போது அந்த மாநிலத்தையே மீண்டும் பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. நீண்ட நாட்களாக நிலவி வரும் இன ரீதியான கசப்புணர்வு வெள்ளிக்கிழமை காலையில் திடீரென வன்முறையாக வெடித்ததில் இரண்டு குக்கி இளைஞர்கள் மற்றும் ஒரு தாங்கூல் நாகா என மொத்தம் மூன்று பேர் பலியாகி உள்ளனர். முல்லம் மற்றும் சோங்பால் கிராமங்களில் வீடுகள் தீயிட்டு எரிக்கப்பட்டதோடு இருதரப்பினரிடையே நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அப்பகுதியை போர்க்களமாக மாற்றியுள்ளன.

துப்பாக்கி காயங்களுடன் மீட்கப்பட்ட உடல்கள் அந்த பகுதியில் நிலவும் தீவிர தன்மையை உணர்த்தும் நிலையில் காயமடைந்த பலர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏற்கனவே மெய்தீ மற்றும் குக்கி சமூகத்தினரிடையே நிலவி வரும் மோதல்களுக்கு மத்தியில் தற்போது குக்கி மற்றும் நாகா பிரிவினர் இடையேயும் வன்முறை பரவி இருப்பது அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. வன்முறை பரவாமல் தடுக்க இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளதோடு முக்கிய இடங்களில் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மணிப்பூர் மக்கள் அச்சத்தின் பிடியில் உறைந்து போயுள்ளனர். 

முதல் சம்பவம் காலை 11:25 மணியளவில் உக்ருல் மாவட்டத்தில் உள்ள முல்லம் கிராமத்திற்கு அருகே நிகழ்ந்தது, அங்கு பாதுகாப்புப் படையினர் இரண்டு உடல்களை மீட்டனர். இறந்தவர்கள் எல். சிட்ல்ஹௌ மற்றும் பி. ஹாவோலாய் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இருவருக்கும் துப்பாக்கிக் காயங்கள் இருந்தன மற்றும் அவர்கள் அணிந்திருந்த உடை அவர்களுக்கு ஆயுதக் குழுவுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது. 

இதையும் படிங்க: மணிப்பூரில் வெடித்த வன்முறை..!! மூடப்பட்ட கடைகள், சந்தைகள்..!! மக்கள் நடமாட்டமின்றி வெறிச்..!!

முன்னதாக, காலை சுமார் 5:30 மணியளவில், டாங்குல் நாகாக்கள் ஆதிக்கம் செலுத்தும் பகுதியான முல்லம் கிராமத்தில், இருதரப்பினர் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை மூண்டது. இந்த மோதலின் போது, ​​கிராமத்தின் புறநகர்ப் பகுதிகளில் இருந்த சில வீடுகளுக்குத் தீ வைக்கப்பட்டதால், அப்பகுதியில் பீதி பரவியது. உள்ளூர் மக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள பாதுகாப்பான இடங்களுக்குத் தப்பிச் சென்றனர். 

மற்றொரு சம்பவத்தில், உக்ருல் மாவட்டத்தில் உள்ள சினகெய்தெய் கிராமத்திற்கு அருகே வெள்ளிக்கிழமை அதிகாலை பதுங்கியிருந்து நடத்தப்பட்ட தாக்குதலில் 29 வயதான எச். ஜமாங் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார். அவர் கம்ஜோங் மாவட்டத்தில் உள்ள சத்ரிக் குல்லன் கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும், நாகா கிராமக் காவலராக ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. அப்பகுதியில் அதிகரித்து வரும் நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு சவால்கள் காரணமாகவே கிராமக் காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாகத் தெரிவித்த டாங்குல் நாகா லாங் அமைப்பு, ஜமாங்கின் கொலைக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தது. இந்தத் தாக்குதலுக்கு குக்கி பயங்கரவாதிகளே காரணம் என்றும் அந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. இருப்பினும், குக்கி அமைப்புகள் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்ததோடு, தங்களுக்கு இதில் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது. 

இதையும் படிங்க: மணிப்பூர்: அதிரடி சோதனையில் இறங்கிய இந்திய ராணுவம்..!! 17 பேர் கைது; பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share