மீண்டும் பற்றி எரியும் மணிப்பூர்... தீக்கிரையான கிராமங்கள்... நாகா கிராமங்களை குறி வைத்து கொடூர தாக்குதல்...!
மணிப்பூரில் மீண்டும் பதற்றம் – நாகா கிராமங்கள் மீது தாக்குதல், முழு அடைப்பு போராட்டத்தால் பரபரப்பு
மணிப்பூரில் மீண்டும் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது. இம்பால் பள்ளத்தாக்கில் தேசிய குடிமக்கள் பதிவேட்டை எனப்படும் என்.ஆர்.சி.யை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்ற நிலையில், காங்போக்பி மாவட்டத்தில் உள்ள நான்கு நாகா கிராமங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தாக்குதலில் பல வீடுகள் தீவைத்து எரிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், பாதிரியார் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்ததாக தங்க்குல் நாகா லாங் அமைப்பு பரபரப்பான புகாரை முன்வைத்துள்ளது.
பல ஆண்டுகளாகவே மணிப்பூர் வன்முறை மற்றும் பதற்றத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு இனக்குழுக்கள் வசித்து வரும் இந்த மாநிலத்தில், நீண்ட காலமாக இரு சமூகங்களுக்கு இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அந்தப் பிரச்சினையே இன்னும் முடிவுக்கு வராத நிலையில், செப்டம்பர் 1-ம் தேதி மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கோயிலில் செல்போன் வைக்க ரூ.5 கட்டணமா? தவெக அரசுக்கு தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம்!
காங்போக்பி மாவட்டத்தில் உள்ள மகுய் பிபுரம், லோயர் டாப்போன், மிடில் டாப்போன் மற்றும் அப்பர் டாப்போன் ஆகிய நான்கு நாகா கிராமங்கள் தாக்குதலுக்கு உள்ளானதாக தங்க்குல் நாகா லாங் அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
இந்தத் தாக்குதலின்போது ஏராளமான வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டதோடு, டாப்போன் பகுதியைச் சேர்ந்த பாதிரியார் லூய்துய்போ நியூமை மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், இதில் அவர் பலத்த காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு குக்கி ஆயுதக் குழுக்கள்தான் காரணம் என தங்க்குல் நாகா லாங் அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. மத்திய அரசுடன் அமைதி ஒப்பந்தமான Suspension of Operations (SoO) ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள சில குக்கி கிளர்ச்சிக் குழுக்கள் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டதாகவும் அந்த அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
அதேநேரத்தில், இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக அதிகாரப்பூர்வ விளக்கமோ அல்லது பதிலோ இதுவரை வெளியாகவில்லை.
நாகா மக்கள் தங்களுக்குள் உள்ள கருத்து வேறுபாடுகளை மறந்து, நிலம் மற்றும் அடையாளத்தைப் பாதுகாப்பதற்காக ஒன்றிணைய வேண்டும் என தங்க்குல் நாகா லாங் அமைப்பின் செயற்குழு அழைப்பு விடுத்துள்ளது.
நாகா பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வரும் தாக்குதல்களை மத்திய மற்றும் மாநில அரசுகள் தடுக்கத் தவறினால், எதிர்காலத்தில் நிலைமை விபரீதமாகும் என்றும், இந்தத் தாக்குதல்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகளே பொறுப்பேற்க வேண்டும் என்றும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.
இந்த நிலையில், மணிப்பூரின் இம்பால் பள்ளத்தாக்கில் உள்ள ஐந்து மாவட்டங்களில் என்.ஆர்.சி.யை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து 24 மணி நேர முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது.
மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தொடங்குவதற்கு முன்பாக தேசிய குடிமக்கள் பதிவேடான என்.ஆர்.சி.யை அமல்படுத்த வேண்டும் என்பதுதான் இந்தப் போராட்டத்தின் முக்கியக் கோரிக்கையாகும்.
மீதேய் சமூகத்தைச் சேர்ந்த சில அமைப்புகள் இணைந்து நடத்தி வரும் Campaign for Just and Fair Delimitation அமைப்பு இந்த முழு அடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.
இந்த முழு அடைப்புப் போராட்டம் காரணமாக இம்பால் பள்ளத்தாக்கின் பல பகுதிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. பெரும்பாலான கடைகள், வர்த்தக நிறுவனங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன.
மேலும், அரசு அலுவலகங்களிலும் அரசு ஊழியர்களின் வருகை மிகக் குறைவாகவே இருந்ததாகக் கூறப்படுகிறது. என்.ஆர்.சி. கோரிக்கை காரணமாக அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில், மத்திய அரசு மணிப்பூரில் மேற்கொள்ள இருந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணியும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேலும், மக்கள் தொகைக் கணக்கெடுப்பை அடுத்த உத்தரவு வரும் வரை ஒத்திவைக்க மணிப்பூர் உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால், இம்பால் பள்ளத்தாக்கில் என்.ஆர்.சி. கோரிக்கையை வலியுறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அமைப்புகள் இந்த உத்தரவால் திருப்தி அடையவில்லை எனக் கூறப்படுகிறது. என்.ஆர்.சி. தொடர்பாக மத்திய அரசு தெளிவான உத்தரவாதத்தை வழங்க வேண்டும் என அந்த அமைப்புகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன.
மணிப்பூரின் முக்கிய நாகா அமைப்பான யுனைடெட் நாகா கவுன்சிலும், மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறைக்கு முன்பாக என்.ஆர்.சி.யை அமல்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளது.
இதனால், ஒருபுறம் நாகா கிராமங்கள் மீதான தாக்குதல் குறித்த குற்றச்சாட்டு, மறுபுறம் என்.ஆர்.சி. கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டம் என மணிப்பூரில் மீண்டும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.
இதையும் படிங்க: கல்லட்டி மலைப்பாதையில் சுற்றுலா வாகனங்களுக்கு புதிய கட்டுப்பாடு! சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!