ராஜஸ்தானில் பரபரப்பு! பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கவிருந்த பெட்ரோ கெமிக்கல் சுத்திகரிப்பு ஆலையில் பயங்கர தீ விபத்து!
ராஜஸ்தான் மாநிலம் பலோத்ரா மாவட்டம், பச்பத்ராவில் அமைந்துள்ள இந்தியாவின் முதல் கிரீன்ஃபீல்ட் ஒருங்கிணைந்த சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் வளாகத்தில் இன்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
ராஜஸ்தான் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை மாற்றியமைக்கும் என எதிர்பார்க்கப்படும் பச்பத்ரா சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து, தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. சுமார் ₹79,450 கோடி முதலீட்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மாபெரும் பெட்ரோ கெமிக்கல் வளாகம், நாளை பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட வேண்டிய நிலையில், இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது.
இன்று (திங்கட்கிழமை) மதியம், சுத்திகரிப்பு நிலையத்தின் கச்சா எண்ணெய் வடித்தெடுத்தல் பிரிவில் (Crude Distillation Unit - CDU) திடீரென தீப்பொறி ஏற்பட்டு, அது சில நிமிடங்களிலேயே பெரிய தீயாக உருவெடுத்தது. ஆலையின் உள்ளே கட்டுமானப் பணிகள் மற்றும் இறுதிச் சோதனைகளில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள், கரும்புகை சூழ்ந்ததைக் கண்டு அலறியடித்து வெளியேறினர்.
சம்பவம் குறித்துத் தகவல் அறிந்தவுடன், ஆலைக்குள் இருந்த தீயணைப்பு வாகனங்கள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் தீயணைப்புப் படைகள் உடனடியாக ஸ்தலத்திற்கு விரைந்தன. சுமார் இரண்டு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீ ஓரளவுக்குக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தீ விபத்துக்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றாலும், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இது நிகழ்ந்திருக்கலாம் என முதற்கட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: ராஜஸ்தானில் சோகம்: மர்ம காய்ச்சலுக்கு 5 குழந்தைகள் பலி..!! பதறும் குடும்பங்கள்..!!
பிரதமர் நரேந்திர மோடி நாளை (ஏப்ரல் 21) காலை 11:30 மணியளவில் இந்த வளாகத்தைத் திறந்து வைத்து, ஒரு மாபெரும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றத் திட்டமிட்டுள்ளார். இதற்காக சுமார் 5,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்தச் சூழலில் ஏற்பட்ட தீ விபத்து, பாதுகாப்பு மற்றும் நிர்வாக ஏற்பாடுகளில் பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா இன்று மாலை நேரில் சென்று பாதிப்புகளை ஆய்வு செய்ய உள்ளார். தீ விபத்தினால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து தொழில்நுட்பக் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். இருப்பினும், பிரதமரின் வருகையில் எந்த மாற்றமும் இருக்காது என்றும், திட்டமிட்டபடி திறப்பு விழா நடைபெறும் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹெச்பிசிஎல் (HPCL) மற்றும் ராஜஸ்தான் அரசு இணைந்து உருவாக்கியுள்ள இந்த 9 MMTPA (Million Metric Tonnes Per Annum) திறன் கொண்ட சுத்திகரிப்பு நிலையம், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. இது இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த கிரீன்ஃபீல்ட் பெட்ரோ கெமிக்கல் வளாகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 2.4 MMTPA பெட்ரோ கெமிக்கல் பொருட்கள் உற்பத்தி செய்யப்படும். இது இறக்குமதியைக் குறைப்பதோடு, பிராந்தியத்தில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ஆலை திறப்பு விழாவிற்கு முந்தைய நாள் விபத்தைச் சந்தித்துள்ளது, அங்கு பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், ஆலை வளாகம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பலோத்ரா மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஈரான் போர் எதிரொலி: அடுத்த வரி குறைப்பில் இறங்கிய மத்திய அரசு..!! இதுக்கு ஜீரோ வரியாம்..!!