மதுராவை உலுக்கிய சோக சம்பவம்..!! படகு விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு..!!
பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்து உள்ளது என காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் சந்திர ராவத் கூறியுள்ளார்.
பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டத்தைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் சுற்றுலா நோக்கில் உத்தர பிரதேசத்துக்கு வந்திருந்தனர். அவர்கள் யமுனை ஆற்றில் புனிதப் பயணம் மேற்கொள்ளும் வகையில் படகு சவாரி செய்து கொண்டிருந்தபோது, பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் பலர் உயிரிழந்துள்ள சோகம் நிகழ்ந்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை மதியம் விருந்தாவன் நகரில் உள்ள கேசி காட் பகுதியை அடுத்த பண்டூன் பாலத்திற்கு அருகே இந்த விபத்து நடைபெற்றது. யமுனை ஆற்றில் மிதந்து வந்த ஒரு பெரிய டிரம் மீது அவர்கள் பயணித்த படகு மோதியதில், படகு திடீரென புரண்டு அனைவரும் ஆற்றில் விழுந்தனர். படகில் இருந்தவர்கள் அனைவரும் தண்ணீரில் தத்தளித்தபோது, பலர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று (திங்கள்கிழமை) மேலும் இரு உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று மதுரா நகரின் பங்காளி காட் பகுதியில் மோனிகா என்ற பெண்ணின் உடலாக அடையாளம் காணப்பட்டது. மற்றொன்று விருந்தாவன் பகுதியில் யாஷ் என்ற இளைஞரின் (வயது 22) உடலாகும். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 15ஆக உயர்ந்துள்ளதாக உத்தர பிரதேச காவல் துறை கண்காணிப்பாளர் சுரேஷ் சந்திர ராவத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மகாராஷ்டிராவில் சோக சம்பவம்: கிணற்றில் பாய்ந்த கார்..!! குழந்தைகள் உள்பட 9 பேர் பரிதாப பலி..!!
சம்பவ இடத்தில் தொடர்ந்து தீவிர மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேசிய பேரிடர் மீட்புப் படையின் (NDRF) 8 குழுக்களும், உத்தர பிரதேச மாநில பேரிடர் மீட்புப் படையின் (SDRF) 2 குழுக்களும் என மொத்தம் 10 குழுக்கள் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. ஆற்றின் பல்வேறு பகுதிகளில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதால், மேலும் சில உடல்கள் மீட்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
விபத்துக்கான முக்கிய காரணமாக படகில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான பயணிகள் இருந்தது குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், படகில் உயிர் காக்கும் உபகரணங்கள் (லைஃப் ஜாக்கெட்) உள்ளிட்ட போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாதது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவம் பஞ்சாப் மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். பலியானவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. விபத்து குறித்து முழுமையான விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
இதையும் படிங்க: அமமுகவினர் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் TVKவில் ஐக்கியம்..! காரைக்குடி வேட்பாளர் முன்னிலையில் இணைவு..!