12 தொகுதி பைனல் பண்ணிக்கலாம்!! திமுகவுக்கு மதிமுக செக்!! லிஸ்டை கொடுத்து பேச்சை ஆரம்பிக்கும் வைகோ!
திமுக மீது அதிருப்தியில் இருந்த ம.தி.மு.க. தலைமை இந்த முறை எப்படியாவது 12 தொகுதிகளை பெற்றுவிட வேண்டும் என்று கங்கணம் கட்டி நிற்கிறதாம்.
தமிழகத்தில் 2026 சட்டசபை தேர்தலுக்கு கூட்டணி பேச்சுவார்த்தைகள் சூடுபிடித்துள்ள நிலையில், தி.மு.க. கூட்டணியில் உள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (ம.தி.மு.க.) பெரும் அழுத்தம் கொடுத்து வருகிறது. கடந்த 2021 தேர்தலில் 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், இம்முறை குறைந்தது 12 தொகுதிகளை வேண்டும் என ம.தி.மு.க. தலைமை கங்கணம் கட்டியுள்ளது.
2021இல் சாத்தூர், பல்லடம், மதுரை தெற்கு, வாசுதேவநல்லூர் (தனி), மதுராந்தகம் (தனி), அரியலூர் ஆகிய 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு அரியலூர் சின்னப்பா, மதுரை தெற்கு பூமிநாதன், வாசுதேவநல்லூர் சதன் திருமலைக்குமார், சாத்தூர் ரகுராமன் ஆகியோர் வெற்றி பெற்றனர். இப்போது ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவின் மகனும் எம்.பி.யுமான துரை வைகோ வெற்றி வாய்ப்புள்ள 12 தொகுதிகளை ஆராய்ந்து பட்டியல் தயார் செய்துள்ளார்.
அந்த பட்டியலில் வாசுதேவநல்லூர், மதுரை தெற்கு, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்சி கிழக்கு, மணப்பாறை, கும்பகோணம், பாபநாசம், மயிலாடுதுறை, செங்கல்பட்டு, சாத்தூர், அரியலூர் ஆகிய தொகுதிகள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் ஆணைய அங்கீகாரத்தை தக்கவைக்க குறைந்தது 12 இடங்களில் போட்டியிட வேண்டும் என்பதால் இந்த கோரிக்கை வலுத்துள்ளது.
இதையும் படிங்க: தமிழக காங்கிரஸ் இரண்டாக உடைவது கன்பார்ம்!! எந்த பக்கம் போவது? குழம்பி தவிக்கும் ராகுல்காந்தி!
தி.மு.க.வுடன் இழுபறி நீடிக்கும் நிலையில், ம.தி.மு.க. மாற்று கோரிக்கையும் வைத்துள்ளது. 6 தொகுதிகள் + ஏப்ரல் மாதம் காலியாகும் ஒரு ராஜ்யசபா எம்.பி. பதவி தர வேண்டும் என வலியுறுத்துகிறது. ஆனால் தி.மு.க. தலைமை அந்த பதவிக்கு முதலமைச்சர் ஸ்டாலினின் மருமகன் சபரீசனுக்கு ஒதுக்க முடிவு செய்திருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
காங்கிரஸ் 35-41 தொகுதிகள் கேட்டு வரும் நிலையில், தி.மு.க. 28-30 தொகுதிகளுக்கு மட்டுமே ஒப்புக்கொள்ளும் சூழலில், ம.தி.மு.க.வின் 12 தொகுதி கோரிக்கை தி.மு.க. தலைமைக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது.
கடந்த ஆண்டு ராஜ்யசபா பதவியில் கமல்ஹாசனுக்கு வாய்ப்பு கொடுத்தது ம.தி.மு.க.வை அதிருப்தியில் ஆழ்த்தியது. இப்போது தேர்தல் களத்தில் வலுவான அங்கீகாரத்தை பெற வேண்டும் என்பதில் ம.தி.மு.க. உறுதியாக உள்ளது. தி.மு.க. இந்த கோரிக்கைகளை எப்படி சமாளிக்கும் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தொகுதி பங்கீட்டை முடிக்க சாதகமாக முடிச்சு கொடுங்க!! கம்யூ., தலைவர்களுடன் திமுக ரகசிய டீல்!! நிர்வாகிகள் கொந்தளிப்பு!