நிறைய லீவு போட்டா எக்ஸாம் எழுத முடியாது.. திட்டவட்டமாக கூறிய நீதீமன்றம்..
வருகைப் பதிவு குறைவாக இருக்கும் மாணவரை தேர்வெழுத அனுமதிப்பது முறையாக வருகைப் பதிவை வைத்திருக்கும் மாணவர்களை கேலிக்குள்ளாக்கும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
எஸ்.ஆர்.எம்.கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவர் ஶ்ரீரிஷ் என்பவருக்கு வருகைப் பதிவு குறைவாக இருந்ததால் செமஸ்டர் தேர்வெழுதவும் 2024-2025 கல்வி ஆண்டுக்கான வகுப்பை தொடரவும் அவரை அனுமதிக்கவில்லை. இதற்கெதிராக, ஶ்ரீரிஷ் தாக்கல் செய்த மனுவை விசாரித்த தனி நீதிபதி மனுவை தள்ளுபடி செய்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து ஶ்ரீரிஷ் இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், சி.குமரப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மாணவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சென்னை உயர் நீதிமன்ற முந்தைய உத்தரவுகளை மேற்கோள் காட்டி தேர்வெழுத அனுமதிக்கும்படி கேட்டுக்கொண்டார். இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், கல்வி சார்ந்த விவகாரங்களில் தலையிட முடியாது என பலமுறை நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக கூறியுள்ளனர்.
இதையும் படிங்க: ரூ. 20 லட்சம் வழிப்பறி.. வருமானவரித்துறை அதிகாரிகள் ஜாமின் மனு தள்ளுபடி..
குறிப்பிட்ட அளவு வருகைப் பதிவு இல்லாத மாணவர்கள் தேர்வெழுத முடியாது என பல்கலைக்கழக மானியக்குழு கூறும் நிலையில் வருகைப் பதிவு குறைவாக இருக்கும் மாணவரை தேர்வெழுத அனுமதிப்பது முறையாக வருகைப் பதிவை வைத்திருக்கும் மாணவர்களை கேலிக்குள்ளாக்கும் எனவும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர். உரிய கட்டணத்தை செலுத்தி மீண்டும் படிப்பை தொடர மாணவர் விரும்பனால் அதற்கு அனுமதியளிக்க வேண்டுமென பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
 
இதையும் படிங்க: கிண்டி ரேஸ்கிளப் கோல்ப் மைதானத்தில் குளம்.. தடைகோரிய மனு தள்ளுபடி..