×
 

கையெழுத்து போடு; நிதியைத் தருகிறோம்! மத்திய அரசு பிளாக்மெயில் செய்வதாக அமைச்சர் அன்பில் மகேஷ் ஆவேசம்! 

இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி கொண்ட மாநிலமான தமிழகத்தை, கல்விக் கொள்கையில் கையெழுத்திடக் கோரி மத்திய அரசு பிளாக்மெயில் செய்கிறது என அமைச்சர் அன்பில் மகேஷ் குற்றம் சாட்டியுள்ளார்.

ஒட்டுமொத்த இந்தியாவிலேயே இரட்டை இலக்கப் பொருளாதார வளர்ச்சியைக் கொண்டுள்ள ஒரே மாநிலம் தமிழ்நாடுதான்; ஆனால், ஒரே ஒரு கையெழுத்து போட்டால் ஒட்டுமொத்த நிதியையும் தருகிறோம் என மத்திய அரசு எங்களை பிளாக்மெயில் செய்கிறது எனப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் 2,000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் ‘திராவிடப் பொங்கல் திருவிழா’ இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அமைச்சர், பொங்கல் பரிசுகளை வழங்கிப் பேசினார். அப்போது, கல்வித்துறைக்கான நிதி முடக்கம், காலை உணவுத் திட்டத்தின் பின்னணி மற்றும் வரும் நாட்களில் மக்கள் மகிழ்ச்சியடையும் வகையில் வரப்போகும் புதிய திட்டங்கள் குறித்து விரிவாக உரையாற்றினார்.

விழாவில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ், "கடந்த 2 ஆண்டுகளில் பள்ளிக்கல்வித் துறைக்கு மட்டும் வரவேண்டிய ரூ.3,548 கோடி நிதியை ஒன்றிய அரசு தராமல் முடக்கி வைத்துள்ளது. இதனால் 43 லட்சம் மாணவர்களும், 32,800-க்கும் மேற்பட்ட பணியாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். எங்களை மிரட்டிப் பணிய வைக்கப் பார்க்கிறார்கள்" எனச் சாடினார். திமுக அளித்த 505 வாக்குறுதிகளில் 404 நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ளவை ஒன்றிய அரசின் நிதி சார்ந்தவை என்றும் அவர் விளக்கமளித்தார். முதலமைச்சர் ஆய்வுக்குச் சென்றபோது ஒரு குழந்தையின் பசியை அறிந்து கொண்டு வந்ததே ‘காலை உணவுத் திட்டம்’ என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட அவர், 20 லட்சம் மாணவர்களின் பசியைப் போக்குவது நீங்கள் போட்ட ஓட்டுதான் என்றார்.

இதையும் படிங்க: "உலகமே நம்மள பார்க்கும்!" தொழில்நுட்ப உலகத்துல தமிழகம் முன்னோடி; உமேஜின் TN மாநாட்டில் அமைச்சர் அதிரடி!

மேலும், "அன்புச்சோலை திட்டம் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. வரும் நாட்களில் மக்கள் ஆச்சரியப்படும் வகையில் பல புதிய நலத்திட்டங்கள் வரப்போகின்றன. கொரோனா போன்ற இடர்ப்பாடுகளைத் தாண்டி மூன்றரை ஆண்டுகளில் இந்தியாவிலேயே நம்பர் ஒன் மாநிலமாகத் தமிழ்நாட்டை முதலமைச்சர் மாற்றியுள்ளார்" எனப் பெருமிதம் கொண்டார். "நாங்கள் செய்யும் திட்டங்கள் உங்கள் வரிப்பணத்தில்தான் செய்யப்படுகின்றன; அதை எந்த அரசு வீண் விரயம் செய்யாமல் மக்களிடம் கொண்டு சேர்க்கிறது என்பதை நீங்கள் முடிவு செய்யுங்கள்" என மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். இந்த நிகழ்ச்சியில் ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ எபினேசர் மற்றும் ஐட்ரீம்ஸ் மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: பொங்கலுக்கு ஊருக்கு போக ரெடியா மக்களே..!! இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share