×
 

திமுக 2026 தேர்தல் அறிக்கை கூட்டம்: திருச்சியை இரண்டாம் தலைநகராக்க அமைச்சர்கள் கோரிக்கை!

திருச்சியை 2ஆவது தலைநகராக அறிவிக்க வேண்டுமென திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவிடம் அமைச்சர்கள் நேரு, அன்பில் மகேஸ், திருச்சி திமுக நிர்வாகிகள் மனு அளித்தனர்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் 2026 சட்டமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுக் கூட்டம் இன்று திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் (ஜமால் முகமது கல்லூரி) நடைபெற்றது. திமுக துணைப் பொதுச் செயலாளரும், அறிக்கை தயாரிப்பு குழுவின் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்.பி. தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், திருச்சி உள்ளிட்ட மத்திய மாவட்டங்களின் தேவைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் பேசிய நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, திருச்சியின் வளர்ச்சி குறித்துப் பேசுகையில் நகைச்சுவையாகவும் அதே சமயம் அழுத்தமாகவும் தனது கருத்துக்களைப் பதிவு செய்தார்.  அழுகிற பிள்ளைக்குத்தான் பால் கிடைக்கும் என்பார்கள். கடந்த முறை தேர்தல் அறிக்கையில் திருச்சிக்குத் தேவையான சில முக்கியத் திட்டங்கள் விடுபட்டுவிட்டன. அதனால் இந்த முறை முன்கூட்டியே வந்து எனது கோரிக்கைகளை முன்வைக்கிறேன் என்று கலகலப்பாகத் தொடங்கினார்.

திருச்சியில் அனைத்துத் தொகுதிகளிலும் அரசு கலைக் கல்லூரிகள் இருந்தாலும், திருச்சி கிழக்கு மற்றும் மணச்சநல்லூர் தொகுதிகளில் கல்லூரிகள் இல்லை. எனவே, இவ்விரு தொகுதிகளுக்கும் புதிய கலைக் கல்லூரிகள் வேண்டும் என வலியுறுத்தினார். திருச்சிக்கு ஒரு வேளாண் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி மற்றும் சித்த மருத்துவக் கல்லூரி அவசியம் தேவை என மனு அளித்தார்.

இதையும் படிங்க: அனல் பறக்கும் திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டு..!! கோலாகல கொண்டாட்டத்தில் வீரர்களும், காளைகளும்..!!

குடமுருட்டியிலிருந்து தடுப்பணையுடன் கூடிய சுற்றுச்சாலை அமைக்க வேண்டும். மேலும், அல்லித்துறை வரை நீட்டிக்கப்பட்ட ஒரு 'பெரிய வட்டச் சாலை' அமைத்தால் திருச்சியின் போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்று கூறினார்.

அமைச்சர் கே.என்.நேரு மற்றும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் இணைந்து ஒரு கோரிக்கையை முன்வைத்தனர். திருச்சியைத் தமிழகத்தின் இரண்டாம் தலைநகராக அறிவிக்க வேண்டும் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க கோரிக்கையைத் தேர்தல் அறிக்கையில் சேர்க்கக் கோரி இருவரும் இணைந்து கனிமொழியிடம் மனு அளித்தனர்.

அமைச்சர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்டறிந்த கனிமொழி கருணாநிதி பேசுகையில், முதலமைச்சர் அவர்கள் மக்களிடம் நேரடியாகச் சென்று கருத்துக்களைப் பெறப் பணித்துள்ளார். நீங்கள் வழங்கிய அனைத்துக் கருத்துக்களும் பரிசீலிக்கப்படும். எதுவெல்லாம் சாத்தியமோ, அவை நிச்சயம் தேர்தல் அறிக்கையில் இடம்பெறும். இது ஒரு மக்களின் தேர்தல் அறிக்கையாக இருக்கும். மேலும், திமுக ஒரு பாரம்பரியமான இயக்கமாக இருந்தாலும், நவீனத் தொழில்நுட்பங்களையும் புதிய கண்டுபிடிப்புகளையும் உள்வாங்கிக்கொண்டு செயல்படும் இயக்கம் என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.

கூட்டத்தில் அமைச்சர்கள் டி.ஆர்.பி. ராஜா, சி.வி. கணேசன், எஸ்.எஸ். சிவசங்கர், ரகுபதி மற்றும் கொள்கை பரப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்றனர். திருச்சி மாவட்டத்தின் 'செம்மொழிப் பூங்கா' முதல் 'தனிக் போக்குவரத்துப் பிரிவு' வரை பல்வேறு கோரிக்கைகளைச் சமூக ஆர்வலர்கள் மற்றும் வணிக அமைப்பினர் மனுக்களாக வழங்கினர்.

இதையும் படிங்க: “பாமக கூட்டணியில் இருந்தபோதும் நாங்கள் வென்றோம்!” திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு அதிரடி பேட்டி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share