இனி ஒழுகும் வீட்டின் கவலை வேண்டாம்... பிரேமாவிற்கு வீடு வழங்கப்படும் என முதல்வர் அறிவிப்பு...!
கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில் முதல் மாத சம்பளத்தை தந்தையிடம் கொடுத்த பெண்ணுக்கு கலைஞர் கனவு இல்லம் கொடுக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கி நடைபெற்றது. இந்த நிகழச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கல்வியில் சிறந்த தமிழ்நாடு எனும் கருப் பொருளில் கொண்டாடப்படும் இந்த விழாவிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி பங்கேற்று திட்டங்களை தொடங்கி வைத்தனர். 2025-26 கல்வி ஆண்டிற்கான புதுமைப் பெண் தமிழ்ப் புதல்வன் திட்டங்களின் தொடக்க விழா அப்போது நடந்தது. கல்வி சார்ந்த 5 முக்கிய திட்டங்களையும் சாதனைகளையும் முன்னிலையாக வைத்து இந்த விழாவானது 7 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது.
இதையும் படிங்க: நல்லா நடத்துனிங்க நிகழ்ச்சி... அம்புட்டும் விளம்பரம்... சீமான் சரமாரி விளாசல்...!
இத்திட்டங்களால் பயன்பெற்றவர்கள், திட்டத்தின் மூலம் சாதித்தவர்கள், அவர்களுக்குத் துணை நின்றவர்கள், ஆசிரியர்கள், நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டு தங்கள் அனுபவங்களையும் தங்கள் வாழ்வில் இத்திட்டங்களின் தாக்கத்தையும் நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டனர்.
அப்போது, தனது முதல் மாத சம்பளத்தை பிரேமா என்ற இளம்பெண் ஒருவர் மேடையில் வைத்து தந்தையிடம் வழங்கினார். அப்பா தான் எல்லாமே என்றும் மிகவும் உறுதுணையாக இருந்ததாகவும் கூறியது பலரது கண்களில் கண்ணீரை வரவழைத்தது. இந்த நிலையில், ஒழுகும் வீட்டில் அப்பா இருப்பாரே என்ற கவலை பிரேமாவுக்கு இனி வேண்டாம் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். எத்தனையோ பேரின் எதிர்ப்பையும் மீறி உங்களைப் படிக்க வைத்த தந்தையிடம், முதல் மாதச் சம்பளத்தைத் தந்து நீங்கள் மகிழ்ச்சி அடைந்தீர்கள் என்று தெரிவித்தார். உங்கள் கனவை நிறைவேற்றிய தந்தைக்குக் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் புதிய வீடு கட்டிக் கொடுப்பதற்கான ஆணையை வழங்கி மகிழ்ச்சி கொள்வதாக கூறினார்.
இதையும் படிங்க: உத்வேகம் அளிக்கும் வேளாண் வணிக திருவிழா... நாளை கோலாகலத் தொடக்கம்...!