எங்க நட்பு அடுத்த தலைமுறைக்கும் தொடரும்... அமைச்சர் அன்பில் மகேஷ் இல்ல திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி..!!
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இல்ல திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று வாழ்த்தினார்.
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குடும்பத்திற்கும் இடையேயான நட்பு உறவு தமிழக அரசியலில் மிகவும் பேசப்படும், ஆழமானதொரு பாரம்பரியம். திராவிட இயக்கத்தின் வரலாற்றோடு பின்னிப்பிணைந்த, மூன்று தலைமுறைகளைத் தாண்டிய குடும்ப உறவாக விளங்குகிறது. அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் தாத்தா அன்பில் பி. தர்மலிங்கம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தார். அவர் மு. கருணாநிதி அவர்களுடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தார். இந்த உறவு அடித்தளமாக அமைந்ததால், அடுத்த தலைமுறையில் அன்பில் தர்மலிங்கத்தின் மகன் அன்பில் பொய்யாமொழி மற்றும் மு. கருணாநிதியின் மகன் மு.க. ஸ்டாலின் இடையேயான நட்பு இன்னும் ஆழமடைந்தது.
இந்த நட்பு மூன்றாம் தலைமுறையில் தொடர்கிறது. அன்பில் பொய்யாமொழியின் மகன் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும், ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலினும் சிறு வயதிலிருந்தே நெருங்கிய நண்பர்களாக உள்ளனர். இருவரும் இளைஞரணியில் ஒன்றாகப் பணியாற்றியுள்ளனர்.
இந்த நிலையில், தஞ்சாவூரில் நடந்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் சகோதரி மகள் திருமண விழா இன்று நடைபெற்றது. இந்த திருமண விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டனர். முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் துர்கா ஸ்டாலின் ஆகியோர் சேர்ந்து தாலி எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தனர். தொடர்ந்து மணமக்களை வாழ்த்தினர். இந்த திருமண விழாவில் மணமக்களை வாழ்த்தி முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.
இதையும் படிங்க: இனிமே கிடையாது... தனியார் பள்ளி ஒழுங்குமுறை விதிகளில் திருத்தம்... தமிழக அரசு கறார்..!!
அப்போது பேசிய அவர், கலைஞர் கருணாநிதி, அன்பில் மகேஷ் தந்தை, ஸ்டாலின் என்ற இதோடு இந்த நட்பு முடிய வில்லை என்றும், அன்பில் மகேஷ் மற்றும் உதயநிதியோடு நட்பு தொடர்வதாகவும், அவர்களது பிள்ளைகளும் நட்புடன் இருப்பதாகவும் தெரிவித்தார். காங்கிரஸ் உடன் வெற்றிகரமாக ஒப்பந்தத்தை முடித்துக் கொண்டு வந்திருப்பதாக பெருமிதம் தெரிவித்தார். அனைவரும் பாராட்டும் வகையில் தேர்தல் கூட்டணியை முடித்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார். செந்தாமரை தனக்கு எப்படி ஒரு மகளோ அதேபோல அன்பில் மகேஷின் சகோதரியும் தனக்கு ஒரு மகள் போல தான் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: #BIG BREAKING தலைகீழ் திருப்பம்... கையெழுத்தானது திமுக - காங்கிரஸ் ஒப்பந்தம்... எவ்வளவு தொகுதிகள்?