×
 

கோவை மேம்பாலத்திற்கு சி. சுப்பிரமணியம் பெயர் சூட்டல்!! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்! யார் அவர்?

கோவையில் ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு ஒப்பணக்கார வீதி வரை உள்ள உயர்மட்ட மேம்பாலத்திற்கு 'சி. சுப்பிரமணியம் மேம்பாலம்' என்று முதல்வர் ஸ்டாலின் பெயர் சூட்டினார்.

கோவை: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அண்மையில் ஒரு மகிழ்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கோவை மாநகரில் ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு ஒப்பணக்கார வீதி வரை உள்ள உயர்மட்ட மேம்பாலத்திற்கு 'சி. சுப்பிரமணியம் மேம்பாலம்' என்று பெயர் சூட்டப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் தனது அறிக்கையில், கொள்கைகளும் பாதைகளும் வேறுபட்டிருந்தாலும் மக்களின் நன்மதிப்பைப் பெற்று நாட்டுக்காகப் பணியாற்றிய தலைவர்களைப் போற்றுவதே உண்மையான மாண்பு என்று குறிப்பிட்டுள்ளார்.

நாட்டு மக்களின் பசிப்பிணியைப் போக்கிய பசுமைப் புரட்சிக்கு அடித்தளமிட்ட பாரத ரத்னா சி. சுப்பிரமணியம் அவர்களின் புகழைப் பரப்ப வேண்டும் என்று டாக்டர் பி.கே. கிருஷ்ணராஜ் வாணவராயர் வைத்த கோரிக்கையை ஏற்று இந்தப் பெயர்ச்சூட்டை மேற்கொள்வதாக அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: வரிவிதிப்பால் பாதிக்கப்பட்ட தொழில்கள்!! தோளோடு தோள் நின்று துணை நிற்கும் தமிழகம்! முதல்வர் உறுதி!

பாரத ரத்னா சி. சுப்பிரமணியம் இந்தியாவின் பசுமைப் புரட்சியின் தந்தை என்று போற்றப்படுபவர். 1910 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள செங்குட்டைப்பாளையம் என்ற கிராமத்தில் பிறந்த இவர், மத்திய அமைச்சராகப் பொறுப்பு வகித்து வேளாண்மைத் துறையில் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தினார்.

நிதி, பாதுகாப்பு, வேளாண்மை உள்ளிட்ட துறைகளில் அமைச்சராகவும், மகாராஷ்டிரா மாநில ஆளுநராகவும் பணியாற்றிய பெருமைக்குரியவர். தமிழக சட்டமன்றத்திலும் பாராளுமன்றத்திலும் நீண்ட காலம் உறுப்பினராக இருந்தவர்.

1942 ஆம் ஆண்டு 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தில் பங்கேற்று சிறை சென்றவர் சி. சுப்பிரமணியம். பசுமைப் புரட்சியை ஏற்படுத்தியதில் ஆற்றிய பங்கிற்காக 1998 ஆம் ஆண்டு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா வழங்கப்பட்டது.

கோவை மாநகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கட்டப்பட்ட இந்த உயர்மட்ட மேம்பாலத்திற்கு சி. சுப்பிரமணியம் பெயர் சூட்டப்படுவது அவரது பிறந்த மண்ணான கோவை மக்களுக்கு பெருமை சேர்க்கும் நிகழ்வாக அமையும். இந்த அறிவிப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதையும் படிங்க: திமுக-வா? தவெக-வா? குழம்பி தவிக்கும் காங்.,!! முதல்வர் ஸ்டாலினுடன் பா.சிதம்பரம் திடீர் சந்திப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share