திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்!! வாய்ப்பு கிடைத்த அடுத்த கணமே மாறும் தலைமை!! மோடி குற்றச்சாட்டு!
தமிழகத்தில் திமுகவை காங்கிரஸ் முதுகில் குத்தியதாக பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.
தமிழ்நாட்டில் தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக பதவியேற்றுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்துள்ளார்.பெங்களூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “எந்த காங்கிரஸ் அரசும் இரண்டாவது முறை ஆட்சிக்கு வருவதில்லை. ஏனென்றால் அவர்களுக்கு துரோகம் செய்ய மட்டுமே தெரியும். அவர்கள் பொய்யர்கள்” என்றார்.
தமிழ்நாட்டு அரசியலைச் சுட்டிக்காட்டிய அவர், “25 முதல் 30 ஆண்டுகளாக திமுகவுடன் நெருக்கமாக இருந்த காங்கிரஸ், இப்போது அதிகாரத்துக்காக திமுகவின் முதுகில் குத்திவிட்டது. திமுகதான் பல நெருக்கடிகளில் காங்கிரஸை காப்பாற்றியது. ஆனால் அதே காங்கிரஸ், தற்போது துரோகம் செய்துள்ளது. ஒட்டுண்ணி காங்கிரஸுக்கு தன்னைத் தக்கவைக்க இன்னொரு கட்சி தேவைப்படுகிறது” என்று தெரிவித்தார்.
2026 சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றது. தனிப்பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்கள் கிடைக்காததால், திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் விலகி தவெகவுக்கு ஆதரவு அளித்தது. இதனால் திமுக தலைமையிலான கூட்டணி எதிர்க்கட்சியாக மாறியது. இன்று (மே 10) விஜய் முதலமைச்சராக பதவியேற்ற விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று வாழ்த்து தெரிவித்தார்.
இதையும் படிங்க: முன்னாள் முதல்வர்கள் கலந்து கொள்ளாத பதவியேற்பு விழா! மு.க.ஸ்டாலின்! இபிஎஸ்! ஓபிஎஸ் ஆப்சென்ட்!
தேர்தல் பிரசாரத்தில் திமுகவை கடுமையாக விமர்சித்த விஜய், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளார். இந்த அரசியல் மாற்றம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் மோடியின் கருத்து தமிழ்நாட்டு அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. திமுக தரப்பில் இதற்கு உரிய பதில் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய அரசு எதிர்காலத்தில் எப்படியான அரசியல் உறவுகளை மேற்கொள்ளும் என்பதை மக்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: 50 ஆண்டுகள் தவெக நிலைத்திருக்கும்!! இளம் வயது அமைச்சர் கீர்த்தனா ஆரூடம்!!