இந்தியாவின் உண்மையான எதிரி?! நாம ஒண்ணு சேர்ந்து தோற்கடிக்கணும்! மோடி ஆவேசம்!
''இந்தியாவின் உண்மையான எதிரி பிற நாடுகளை சார்ந்திருப்பது தான். இந்தியாவின் இந்த எதிரியைத் தோற்கடிக்க நாம் ஒன்றுபட வேண்டும்'' என பிரதமர் மோடி தெரிவித்தார்.
குஜராத் மாநிலம் பாவ்நகரில் சனிக்கிழமை (செப். 20) நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, ரூ.34,200 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார். 'சமுத்திரம் சே சம்ருத்தி' திட்டத்தின் கீழ், துறைமுக மேம்பாடு, கடல் வாணிபம், சாலை, சுகாதாரம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, நகர்ப்புற வளர்ச்சி உள்ளிட்ட துறைகளில் இந்த திட்டங்கள் அமைந்துள்ளன. நவராத்திரி பண்டிகை தொடங்கும் வேளையில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மோடி, காங்கிரஸ் ஆட்சியை கடுமையாக விமர்சித்து, இந்தியாவின் தன்னம்பிக்கையை வலியுறுத்தினார்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, "நவராத்திரி தொடங்கவிருக்கும் இந்த சுப வேளையில், பாவ்நகருக்கு வந்துள்ளேன். ஜிஎஸ்டி குறைப்பால் இந்த ஆண்டு சந்தைகள் பெரும் வளர்ச்சியை சந்திக்கும். எனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த இந்தியர்களுக்கும், வெளிநாட்டினருக்கும் நன்றி," என்று கூறினார். மேலும், "இந்தியாவின் அனைத்து பிரச்சினைகளுக்கும் ஒரே மருந்து தன்னம்பிக்கை. காங்கிரஸ் ஆட்சியில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டது. அவர்கள் இளைஞர்களுக்கு பெரும் தீங்கு விளைவித்தனர்," என்று குற்றம் சாட்டினார்.
இந்தியாவின் கடல்சார் துறையை வலுப்படுத்துவது குறித்து பேசிய மோடி, "உலகளவில் பொருட்களை அனுப்புவதற்காக இந்தியா ஆண்டுதோறும் ரூ.6 லட்சம் கோடி வெளிநாட்டு நிறுவனங்களுக்கு செலவிடுகிறது. இது நமது பாதுகாப்பு பட்ஜெட்டுக்கு சமமானது. இந்தியாவின் துறைமுகங்கள், உலகளாவிய கடல்சார் சக்தியாக இந்தியாவை உயர்த்துவதற்கு முதுகெலும்பாக உள்ளன. ஐஎன்எஸ் விக்ராந்த் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. இனி பெரிய கப்பல்களை உருவாக்குவோம் என்று உறுதியளிக்கிறேன்," என்றார்.
இதையும் படிங்க: ரூ.34 ஆயிரம் கோடி! ஒளிரும் குஜராத்! புதிய திட்டங்களை துவக்கி வைத்தார் மோடி!
இந்தியாவின் திறனைப் பற்றி பேசிய மோடி, "இந்தியாவில் திறனுக்கு பற்றாக்குறை இல்லை. ஆனால், காங்கிரஸ் ஆட்சியில் அதை பயன்படுத்தும் திறன் இல்லை. இன்று இந்தியா உலகளாவிய சகோதரத்துவ உணர்வுடன் முன்னேறுகிறது. நமக்கு எந்த பெரிய எதிரியும் இல்லை. இருந்தால், அது மற்ற நாடுகளைச் சார்ந்திருப்பதுதான். இந்த எதிரியை தோற்கடிக்க நாம் ஒன்றுபட வேண்டும்," என்று வலியுறுத்தினார்.
'சமுத்திரம் சே சம்ருத்தி' கண்காட்சியை பிரதமர் பார்வையிட்டார். இதில் சாகர்மாலா 2.0 திட்டத்தின் முக்கிய அம்சங்கள் விளக்கப்பட்டன. குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், மத்திய அமைச்சர் சர்பானந்த சோனவால் உள்ளிட்டோர் மோடிக்கு நினைவு பரிசு வழங்கி கௌரவித்தனர். இந்த திட்டங்கள், குஜராத் மற்றும் இந்தியாவின் கடல் பொருளாதாரத்தை வலுப்படுத்தி, வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ரூ.34 ஆயிரம் கோடி! ஒளிரும் குஜராத்! புதிய திட்டங்களை துவக்கி வைத்தார் மோடி!