ஓமன், பிரான்ஸ், மலேசியா தலைவர்களுடன் போனில் பேசிய மோடி! போர் அல்ல! பேச்சுவார்த்தை ஒன்றே தீர்வு என முழக்கம்!
மேற்காசியாவில் அமைதியை ஏற்படுத்த பேச்சுவார்த்தை ஒன்றே வழி என்று ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக்கிடம் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதேபோல, பிரான்ஸ், மலேசியா உள்ளிட்ட நாட்டு தலைவர்களுடனும் அவர் பேசியுள்ளார்.
மேற்காசியாவில் அமெரிக்கா-இஸ்ரேல் vs ஈரான் இடையே தொடரும் போர் காரணமாக ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க பேச்சுவார்த்தை மூலம் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
ஈரான் தாக்குதலுக்கு உள்ளான ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக்குடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடினார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
“ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக்குடன் ஆக்கப்பூர்வமான உரையாடல் நடத்தினேன். அவருக்கு ரம்ஜான் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டேன். மேற்காசியாவில் நிலவும் பதற்றத்தை குறைத்து, அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் மீட்டெடுக்க பேச்சுவார்த்தை ஒன்றே சிறந்த வழி என இருவரும் ஒப்புக்கொண்டோம்” என்று மோடி குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: ஈரானை நொறுக்கும் அமெரிக்கா! உள்ளே வரும் ரஷ்யா! போரை நிறுத்துங்க!! புடின் மாஸ் எண்ட்ரி!!
மேலும், “ஓமன் நாட்டின் இறையாண்மையை மீறும் வகையில் நடத்தப்பட்ட தாக்குதலை இந்தியா கண்டிக்கிறது. அதேநேரத்தில், இந்தியர்கள் உட்பட ஆயிரக்கணக்கான வெளிநாட்டு மக்களை பாதுகாப்பாக சொந்த நாடுகளுக்கு அனுப்ப ஓமன் அரசு எடுத்த முயற்சிகளை பாராட்டுகிறேன். ஹார்முஸ் ஜலசந்தி வழியாக பாதுகாப்பான மற்றும் தடையற்ற கப்பல் போக்குவரத்தை இந்தியாவும் ஓமனும் வலியுறுத்துகின்றன” என்றும் அவர் தெரிவித்தார்.
இதேபோல் பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம் மற்றும் ஜோர்டன் அரசர் அப்துல்லா ஆகியோருடனும் தொலைபேசியில் உரையாடினார். அனைத்து உரையாடல்களிலும் தற்போதைய மேற்காசியப் பதற்றத்தை எப்படி சமாளிப்பது என்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், “தற்போதைய சூழலை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து உலகத் தலைவர்கள் ஒருவருக்கொருவர் தொடர்ந்து கலந்துரையாடி வருகின்றனர். இந்தியா அமைதி, உரையாடல் மற்றும் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்துக்கு முழு ஆதரவு அளித்து வருகிறது” என்றார்.
இந்தியா மேற்காசியாவில் நிலையான அமைதியை விரும்புவதாகவும், அனைத்து தரப்பினரும் உரையாடல் மூலம் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்பதையும் பிரதமர் மோடியின் இந்த உரையாடல்கள் வலியுறுத்துகின்றன. தொடரும் மோதலால் ஏற்படும் எரிசக்தி நெருக்கடி மற்றும் பொருளாதார பாதிப்புகளை இந்தியா கருத்தில் கொண்டு, அமைதிக்கான முயற்சிகளை தீவிரப்படுத்தி வருகிறது.
இதையும் படிங்க: யுஏஇ, சவுதி, இஸ்ரேல், கத்தார் நாடுகளுக்கான விமான சேவை ரத்து! கைவிரித்தது ஏர் இந்தியா!! மக்கள் தப்பிக்க வழி இருக்கா?