இந்தியர்கள் சென்ற கப்பல் மீது தாக்குதல்! கடலில் குதித்த மாலுமிகள்! 13 பேர் மீட்பு! ஒருவர் மாயம்!
ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் மத்திய கிழக்கு கடற்பகுதியில் வணிகக் கப்பல்கள் மற்றும் மாலுமிகளின் பாதுகாப்பு தொடர்பாக ஏற்கனவே கவலை நிலவி வரும் நிலையில், இந்த தாக்குதல் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது
கத்தாரில் இருந்து ஓமனில் உள்ள சோஹார் துறைமுகத்தை நோக்கி சென்றுகொண்டிருந்த பனாமா கொடியுடன் கூடிய MT El Gaia எண்ணெய் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓமன் கடற்கரை அருகே சென்றபோது கப்பல் மீது திடீரென தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தாக்குதலை நடத்தியவர்கள் யார் என்பது இதுவரை அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை.
தாக்குதலைத் தொடர்ந்து கப்பலில் தீப்பற்றியதாகவும், மாலுமிகள் தங்களது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள கடலில் குதித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கப்பலில் மொத்தம் 14 இந்திய மாலுமிகள் இருந்ததாக இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. ஓமன் அதிகாரிகளின் மீட்புக் குழுவினர் தீவிரமாக செயல்பட்டு, இதுவரை 13 இந்தியர்களை பத்திரமாக மீட்டுள்ளனர். காணாமல் போன மற்றொரு இந்திய மாலுமியை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து வணிகக் கப்பல்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்ட அறிக்கையில், ஓமன் அருகே வணிகக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஏற்றுக்கொள்ள முடியாதது என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: இந்திய மாலுமிகள் 6 பேருடன் சரக்கு கப்பலை கடத்திய சோமாலியா கடற்கொள்ளையர்கள்! கப்பலில் பயங்கர ஆயுதங்கள்!
மேலும், இந்திய தூதரக அதிகாரிகள் ஓமன் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து, மீட்பு நடவடிக்கைகள் மற்றும் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் மத்திய கிழக்கு கடற்பகுதியில் வணிகக் கப்பல்கள் மற்றும் மாலுமிகளின் பாதுகாப்பு தொடர்பாக ஏற்கனவே கவலை நிலவி வரும் நிலையில், இந்த தாக்குதல் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. சர்வதேச கடல்வழிகளில் கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்லவும், வர்த்தகப் போக்குவரத்து தடையின்றி நடைபெறவும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.
மேலும், பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பதற்றத்தை உடனடியாக தணித்து, பேச்சுவார்த்தை மற்றும் தூதரக நடவடிக்கைகள் மூலம் அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்றும் இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. இதற்கிடையே, மாயமான இந்திய மாலுமியை மீட்கும் பணியில் ஓமன் அதிகாரிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: “குண்டு மழை பொழியும்... சின்னாபின்னமாகிடுவீங்க...” - ஓமானுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த டிரம்ப்...!