×
 

ஓடும் ரயிலில் வலியால் துடித்த கர்ப்பிணி! வீடியோ காலில் பிரசவம் பார்த்த இளைஞர்!

மஹாராஷ்டிராவின் மும்பையில், ஓடும் ரயிலில் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணியை ரயிலில் இருந்து இறக்கிய இளைஞர், டாக்டரை 'வீடியோ' அழைப்பில் தொடர்பு கொண்டு அவரது உதவியுடன் பிரசவம் பார்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற் படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவின் மும்பையில், ஓடும் ரயிலில் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி இளம்பெண்ணை காப்பாற்றிய இளைஞரின் செயல், சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவசர சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தி, தோழியான டாக்டரின் வீடியோ அழைப்பு வழிகாட்டலில் பிளாட்பார்மில் குழந்தை பிரசவம் செய்த விகாஸ் பெட்ரேவின் தைரியம், '3 இடியட்ஸ்' திரைப்படத்தில் அமிர்கான், நண்பன் படத்தில் விஜய் செயலை போன்று பாராட்டப்படுகிறது. சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது, தாயும் குழந்தையும் நலமுடன் உள்ளனர்.

கடந்த அக்டோபர் 15-ஆம் தேதி நள்ளிரவு 12:40 மணியளவில், விரார் (Virar) புறநகரில் வசிப்பவர் அம்பிகா ஜா (24), நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். பிரசவத்துக்காக குடும்பத்தினருடன் மும்பை BYL நாயர் மருத்துவமனைக்கு சென்றனர். 

இதையும் படிங்க: 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்! 14 மாவட்டங்களில் கனமழை கன்ஃபார்ம்! குடையை மறந்துறாதீங்க!

அங்கு டாக்டர் பரிசோதித்து, "சில நாட்கள் ஆகும்" என்று கூறி திரும்ப அனுப்பினர். ரயிலில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, கோரேகாவன் (Goregaon) அருகே அவருக்கு கடுமையான பிரசவ வலி ஏற்பட்டது. ஒருகட்டத்தில் குழந்தை வெளியே வரத் தொடங்கியது.

இதைப் பார்த்த சக பயணி விகாஸ் பெட்ரே (33), சினிமாட்டோகிராஃபர் (வீடியோ கேமரா மேன்) என்று அறியப்படும் இளைஞர், உடனடியாக அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினார். ராம் மந்திர் ரயில் நிலையத்தில் (Ram Mandir station) ரயில் நின்றது. அங்கு டாக்டர்கள், ஆம்புலன்ஸ் அல்லது மருத்துவ வசதிகள் எதுவும் இல்லை. பயப்படாமல், தன் தோழியான டாக்டர் தேவிகா தேஷ்முக் (Devika Deshmukh)-ஐ வீடியோ அழைப்பில் தொடர்பு கொண்டார்.

டாக்டர் தேவிகா, "அருகில் மருத்துவமனை இல்லையா?" என்று கேட்டபோது, "இல்லை" எனத் தெரிவித்த விகாஸை, அடுத்தடுத்து வழிகாட்டினார். "குழந்தை தலை வெளியே வருகிறது, அதை மெதுவாக தாங்குங்கள். தொப்புள் கொடியை வெட்டுவதற்கு அருகிலுள்ள கடைக்காரரிடமிருந்து கத்தி எடுத்து வந்து சுத்தம் செய்யுங்கள்" என்று படிப்படியாக உத்தரவிட்டார். விகாஸ், அனைத்தையும் தாமதம் இன்றி சுத்தமாக செயல்படுத்தினார். 45 நிமிடங்களுக்குப் பின் அந்த இளம்பெண்குழந்தையை பிரசவித்தார். அப்போது நேரம் அதிகாலை 1:30 மணி.

சுற்றியுள்ள பயணிகள், ரயில் போலீஸ் உட்பட அனைவரும் விகாஸை பாராட்டினர். "நான் பயந்திருந்தேன், ஆனால் டாக்டர் சொன்ன படியே செய்தேன்" என்று அவர் கூறினார். பிறகு, ரயில் போலீஸ் ஏற்பாட்டால் வந்த ஆம்புலன்ஸில் தாயும் குழந்தையும் கூப்பர் மருத்துவமனைக்கு (Cooper Hospital) அனுப்பப்பட்டனர். அவர்கள் நலமாக இருப்பதாக மருத்துவமனை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தை மஞ்சித் தில்லான் (Manjeet Dhillon) என்ற நபர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வீடியோ வைரல் ஆகியுள்ளது. "ஆம்புலன்ஸ் வருவதற்கு நேரம் ஆகும், அப்போது டாக்டர் வீடியோவில் வழிகாட்டினார். உயிர் காக்க விகாஸ் செய்தது அசத்தல்" என்று பதிவிட்டுள்ளார். 

சமூக வலைதளங்களில் "ரியல் ராஞ்சோ", "மும்பையின் பெருமை" என்று பாராட்டுகள் பொழிந்து வருகின்றன. அம்பிகாவின் உறவினர் பிரின்ஸ் மிஸ்ரா, "விகாஸ் நம்மை காப்பாற்றினார்" என்று நன்றி தெரிவித்துள்ளார். இந்த சம்பவம், மும்பை மக்களின் உதவும் மனப்பான்மையை, சமயோஜிதத்தை வெளிப்படுத்துகிறது. விகாஸ் போன்றவர்கள் சமூகத்தின் உண்மையான வீரர்கள் என்று அனைவரும் ஒப்புக்கொள்கின்றனர்.

இதையும் படிங்க: ஹங்கேரியில் புடினை சந்திக்க போறேன்! ஜெலன்ஸ்கி கிட்டயும் பேசுவேன்! அடுத்தடுத்து அப்டேட் தரும் ட்ரம்ப்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share