சோப் விளம்பரத்துக்கு இத்தனை கோடியா? தமன்னாவின் ஊதிய விவரத்தை சொல்லி ஷாக் கொடுத்த கர்நாடக அரசு!
மைசூர் சாண்டல் சோப் விளம்பரத்தின் அடிப்பதற்காக நடிகை தமன்னாவிற்கு 6.20 கோடி ரூபாய் ஊதியம் வழங்கப்பட்டதாக கர்நாடகா அரசு தெரிவித்துள்ளது.
மைசூர் சாண்டல் சோப், கர்நாடக அரசின் கர்நாடக சோப்ஸ் அண்ட் டிடர்ஜென்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தால் 1916 முதல் தயாரிக்கப்படும் ஒரு பாரம்பரிய சோப்பு பிராண்டாகும். இந்த சோப்பு, தனித்துவமான அடையாளத்தைக் கொண்டுள்ளது. இந்த பிராண்டின் விளம்பரத் தூதராக பாலிவுட் மற்றும் தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகை தமன்னா பாட்டியாவை கர்நாடக அரசு நியமித்தது. இந்த நியமனத்திற்காக இரண்டு ஆண்டுகளுக்கு 6.2 கோடி ரூபாய் சம்பளம் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த முடிவு, கர்நாடகாவில் கடும் சர்ச்சையையும் எதிர்ப்பையும் தூண்டியுள்ளது.
உள்ளூரில் நடிகைகளுக்கு பஞ்சமா என்றும் எதற்காக நடிகை தமன்னாவை தேர்வு செய்தார்கள் என்ற கேள்வியும் எழுந்தது. இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய அம்மாநில அமைச்சர் எம் பி பாட்டில், கர்நாடகாவிற்கு அப்பாலும் சோப்பை கொண்டு செல்வதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.
இந்த நிலையில் மைசூர் சாண்டல் சோப்பின் விளம்பர தூதராக நடித்த நடிகை தமன்னாவிற்கு இரண்டு வருடங்களுக்கு 6.20 கோடி ரூபாய் ஊதியமாக வழங்கி உள்ளதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
சட்டப்பேரவையில் பாஜக உறுப்பினர் சுனில் குமார் எழுப்பிய கேள்விக்கு அரசு தரப்பில் இந்த விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மைசூர் சாண்டல் சோப் விளம்பரத்திற்கு மட்டும் 48 கோடியே 88 லட்சம் ரூபாயை செலவிட்டு இருப்பது கர்நாடகா அரசு தரப்பு விளக்கத்தின் மூலம் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: பெங்களூருவில் புதிய கிரிக்கெட் ஸ்டேடியம்.. கிரீன் சிக்னல் காட்டிய கர்நாடக அரசு..!!