அந்த ரூ.4 கோடி ஞாபகம் இருக்கா? நயினாருக்கு செக்..! ED விசாரணை கேட்டு ஐகோர்ட்டில் மனு..!!
கடந்த மக்களவைத் தேர்தலின் போது நெல்லையில் ரயிலில் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் மீது வழக்குப் பதிய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலின் போது நெல்லை விரைவு ரயிலில் நான்கு கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்ட சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு முக்கிய நிகழ்வு. 2024ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் தேதி இரவு, சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து நெல்லை நோக்கி புறப்பட்ட நெல்லை எக்ஸ்பிரஸ் விரைவு ரயிலில் இந்த சம்பவம் நடைபெற்றது. ரயில் தாம்பரம் ரயில் நிலையத்தை அடைந்தபோது, தேர்தல் பறக்கும் படையினர் ரகசிய தகவலின் அடிப்படையில் சோதனை நடத்தினர்.
AC பெட்டிகளில் பயணித்த மூன்று பயணிகளிடம் ஆறு பைகள் மற்றும் சூட்கேஸ்களில் சுமார் 3.98 கோடி முதல் 4 கோடி ரூபாய் வரையிலான ரொக்கப் பணம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்தப் பணத்தை எடுத்துச் சென்றவர்களிடம் உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாததால், அந்தத் தொகை முழுவதும் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த மூன்று நபர்களும் நெல்லை மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்ட நயினார் நாகேந்திரனுக்கு நெருக்கமானவர்கள் என்று சந்தேகிக்கப்பட்டது. அவர்களில் ஒருவர் பாஜக தொண்டர் என்றும், மற்றவர்கள் அவருடன் தொடர்புடையவர்கள் என்றும் தகவல்கள் வெளியாயின. அந்த நபர்கள் சதீஷ், நவீன், பெருமாள் என அடையாளம் காணப்பட்டனர். அவர்கள் விசாரணையின்போது முரண்பாடான பதில்களை அளித்ததால், அதிகாரிகள் சந்தேகம் அடைந்து சோதனையை தீவிரப்படுத்தினர்.
இதையும் படிங்க: தலை விரித்தாடும் போதை புழக்கம்... பறிபோன பிஞ்சு உயிர்..! நயினார் கடும் கண்டனம்..!
இந்தப் பணம் நெல்லை தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப் பரிமாற்றம் செய்வதற்காக எடுத்துச் செல்லப்பட்டதா என்பது குறித்து விசாரணை தொடங்கியது. தற்போது சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் நயினாருக்கு செக் வைக்கும் வகையில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. நயினார் நாகேந்திரன் மீது வழக்கு பதிவு செய்ய அமலாக்கத் துறைக்கு உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. நயினார் நாகேந்திரன் பாஜகவை சேர்ந்தவர் என்பதால் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. எனவே நைனார் நாகேந்திரன் மீது வழக்குப்பதிந்து அமலாகத் துறை விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட கோரி மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஜாடிக்கு ஏத்த மூடி..! சிலிண்டர் தட்டுபாட்டால் சிக்கி தவிக்கும் மக்கள்... பாஜக, அதிமுகவை கிழித்த முதல்வர் ஸ்டாலின்..!!