இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா வரிக்குறைப்பு... வளர்ச்சியின் மைல்கல்..! நயினார் பெருமிதம்..!
இந்தியப் பொருட்கள் மீதான அமெரிக்க வரி குறைப்பு இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய மைல்கல் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்தியப் பொருட்கள் மீதான அமெரிக்க வரி குறைப்பு சமீபத்தில் நிகழ்ந்த ஒரு முக்கியமான வர்த்தக முன்னேற்றமாகும். நேற்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் நடத்திய தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த உயர் வரிகளை கணிசமாகக் குறைப்பதாக அறிவித்தார். இது இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக உறவில் பெரும் நிவாரணத்தை ஏற்படுத்தியுள்ளது.கடந்த 2025 ஆம் ஆண்டு அமெரிக்கா, இந்தியாவின் மீது "reciprocal tariff" என்ற பெயரில் 25% வரியை விதித்திருந்தது. இதற்கு மேலதிகமாக, இந்தியா ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால், மேலும் 25% தண்டனை வரி விதிக்கப்பட்டது.
இதனால் இந்தியப் பொருட்களுக்கு மொத்தமாக 50% வரை வரி விதிக்கப்பட்டிருந்தது. இந்த உயர் வரி விதிப்பு இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு பெரும் சுமையாக இருந்தது. குறிப்பாக தகவல் தொழில்நுட்பம், மருந்து, ஆட்டோ பாகங்கள், ரசாயனங்கள் போன்ற துறைகள் பாதிக்கப்பட்டன. இதனால் 2025இல் இந்திய பங்குச் சந்தை உலகளாவிய அளவில் மோசமான செயல்திறனைப் பதிவு செய்தது, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பெரும் தொகையை வெளியேற்றினர். இந்நிலையில், டிரம்ப்-மோடி உரையாடலுக்குப் பிறகு, அமெரிக்கா இந்தியப் பொருட்களுக்கு விதிக்கும் வரியை உடனடியாக 18%ஆகக் குறைப்பதாக அறிவித்தது.
இந்தியப் பொருட்கள் மீதான அமெரிக்க வரி குறைப்பு இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய மைல்கல் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். நமது பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உடன் கலந்தாலோசித்து, இந்தியப் பொருட்கள் மீதான அமெரிக்க வரியை வெற்றிகரமாக 18% ஆகக் குறைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என்று கூறினார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையின் மூலம் மேக் இன் இந்தியா எனும் உள்நாட்டு உற்பத்தி வலுப்பெறப்பட்டு, சிறுகுறு நிறுவனங்கள், ஜவுளித் துறையினர், ஏற்றுமதியாளர்கள் ஆகியோர் பயன்பெறுவதால், பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளும் உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: விஜய்க்கு டான்ஸ் ஆட தான் தெரியும்..! ஒரு கட்சித் தலைவரின் செயலா? பாஜக குறித்த விமர்சனத்துக்கு நயினார் பதிலடி..!
ஐரோப்பிய ஒன்றியத்துடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தைக் கையெழுத்திட்ட சில நாட்களுக்குள்ளேயே, அமெரிக்கா தனது வரியைக் குறைத்திருப்பது, உலகரங்கில் இந்தியப் பொருளாதாரத்திற்கு இருக்கும் முக்கியத்துவத்தையும், பிரதமர் மோடியின் தலைமையின் சிறப்பையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்றார். மொத்தத்தில், நமது இந்தியாவின் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரக் கனவு நிஜமாகும் நாள் நெடுந்தொலைவில் இல்லை என்பது திண்ணம் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: மத்திய நிதிநிலை அறிக்கை தேசத்தின் வளர்ச்சிக்கான அச்சாணி... பிரதமருக்கு நன்றி சொன்ன நயினார்..!