60 ஆண்டு போராட்டம் முடிந்தது?! அழிவின் விளிம்பில் நக்சல்!! அமித்ஷா நடவடிக்கைக்கு கைமேல் பலன்!!
நாட்டில், 60 ஆண்டுகளாக அரசுக்கு எதிராக ஆயுதமேந்திய போராட்டத்தை நடத்தி வந்த நக்சல் அமைப்பு, நம் பாதுகாப்பு படையினரின் அதிரடி நடவடிக்கைகளால், தற்போது அழிவின் விளிம்பில் உள்ளது.
நாட்டின் உள்நாட்டு பாதுகாப்புக்கு 60 ஆண்டுகளாக மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்த நக்சல் இயக்கம் தற்போது அழிவின் விளிம்பில் நிற்கிறது. மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த, பாரபட்சமற்ற அதிரடி நடவடிக்கைகளால் நக்சல்கள் தங்கள் பலத்தை முற்றிலும் இழந்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு நக்சல்களை முற்றிலும் ஒழிக்க வரும் மார்ச் 31-க்குள் இலக்கு நிர்ணயித்துள்ளது.
'ஆப்ரேஷன் காகர்' என்ற சிறப்பு நடவடிக்கையின் கீழ் பாதுகாப்பு படைகள் தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றன. நக்சல் சித்தாந்தத்தை கைவிட்டு சரணடையும் போராளிகளுக்கு மறுவாழ்வு திட்டங்கள், உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் பலர் திருந்தி சமூகத்தில் இணைந்து வருகின்றனர்.
சமீபத்தில் தெலுங்கானாவில் நக்சல் அமைப்பின் முக்கிய மூளையாக செயல்பட்டு வந்த தேவ்ஜி உட்பட நான்கு முக்கிய தலைவர்கள் போலீசில் சரணடைந்தனர். இது அமைப்பின் கட்டமைப்பை நிலைகுலையச் செய்துள்ளது. கடந்த சில ஆண்டுகளில் தெலுங்கானாவில் மட்டும் 5,865 நக்சல்கள் சரணடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: க்ளைமேக்ஸை எட்டிய நக்சல் ஒழிப்பு நடவடிக்கை! சொன்னதை செய்து காட்டிய அமித்ஷா!! 22 பேர் சரண்!
நாடு முழுவதும் 10 ஆண்டுகளில் 1,289 நக்சல்கள் என்கவுன்டர்களில் கொல்லப்பட்டுள்ளனர். 131 முக்கிய நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 16 மத்திய குழு உறுப்பினர்களில் தற்போது 3 பேர் மட்டுமே எஞ்சியுள்ளனர். முக்கிய தலைவர் முப்பளா லட்சுமண ராவ் என்கிற கணபதி உடல்நலக் குறைவால் தெலுங்கானா காவல் துறையின் கண்காணிப்பில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது பஸ்தார் காடுகளில் மிகச் சிலர் மட்டுமே மீதமுள்ளனர். மற்ற பகுதிகளில் நக்சல்கள் முற்றிலும் துடைத்தெறியப்பட்டுள்ளனர். புதிய ஆட்கள் சேராதது, வயதான தலைமை, உள்ளூர் மக்களின் ஆதரவு முற்றிலும் சரிந்தது ஆகியவை நக்சல்களின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணங்கள். ஒருகாலத்தில் கிராம மக்கள் உணவும் புகலிடமும் அளித்தனர். ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.
நக்சல்பாரி கிராமத்தில் 1967-ல் சாரு மஜும்தார் தலைமையில் தொடங்கிய இயக்கம், மாவோ சேதுங்கின் ஆயுத புரட்சி சித்தாந்தத்தை ஏற்று 'நக்சலிசம்' என்று அழைக்கப்பட்டது. 1969-ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியாக உருவானது.
1972-ல் சாரு மஜும்தார் கைது மற்றும் மரணத்துக்குப் பிறகு பின்னடைவு ஏற்பட்டது. 1980-களில் ஆந்திராவில் 'மக்கள் யுத்தக் குழு' என்ற பெயரில் மீண்டும் எழுச்சி பெற்றது. 2000-க்குப் பிறகு சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பீஹார், ஒடிஷா, மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் ஆதிக்கம் செலுத்தியது. ஆனால் தற்போது அந்த இயக்கம் இறுதி அத்தியாயத்தை நெருங்கிவிட்டது.
இதையும் படிங்க: காஷ்மீருக்குள் ஊடுருவ பயங்கரவாதிகள் ஸ்கெட்ச்! இந்தியா பதிலடி! ஒயிட் நைட் கார்ப்ஸ் பிரிவினர் வேட்டை!!