இந்தியாவுடன் கைகோர்த்த அமெரிக்க மீட்புக்குழு! மண்ணுக்குள் சிக்கிய 600 பேர் கதி என்ன? தீவிரமடையும் மீட்புப் பணி!
நேபாளத்தில் இந்திய மீட்புக்குழுவினர் மேற்கொண்டு வரும் பணிகளுக்கு அமெரிக்க குழுவினர் பாராட்டு தெரிவித்துள்ளனர். கடுமையான சூழ்நிலையிலும் இந்திய குழுக்கள் தொடர்ந்து மேற்கொண்டு வரும் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
காத்மாண்டு: நேபாளத்தை உலுக்கியுள்ள பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவின் தாக்கம் தொடர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. சிலிமே நீர்மின் நிலையத்தின் சுரங்கத்தில் 600க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என கூறப்படும் நிலையில், அவர்களை மீட்கும் பணியில் இந்திய மீட்புக்குழுவுடன் அமெரிக்காவைச் சேர்ந்த சிறப்பு குழுவும் இணைந்துள்ளது.
நேபாள போலீசாரின் தகவலின்படி, பேரிடரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,127 ஆக உயர்ந்துள்ளது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து உடல்கள் மீட்கப்பட்டு வரும் நிலையில், இதுவரை 95 உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தால் சிலிமே மற்றும் லாங்டாங் பகுதிகளில் உள்ள நீர்மின் நிலையங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. குறிப்பாக நீர்மின் நிலையங்களின் சுரங்கங்களுக்குள் வெள்ளத்துடன் அடித்து வரப்பட்ட மண் மற்றும் சேறு பெருமளவில் தேங்கியுள்ளது. இதனால் அங்கு பணியில் இருந்த பலர் வெளியேற முடியாமல் சிக்கியிருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நேபாளத்துக்கு மீண்டும் பறந்த இந்திய விமானம்! தொடரும் மீட்புப் பணி! குவியும் மருந்துகள், மீட்புப் படையினர்!
சுரங்கங்களுக்குள் சிக்கியவர்களை மீட்க இந்திய மீட்புக்குழுவினர் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். மண்ணை அகற்ற வெடிபொருட்கள், கனரக இயந்திரங்கள் உள்ளிட்ட உபகரணங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், சுரங்கங்களுக்குள் காற்றோட்டத்தை ஏற்படுத்துவதற்கான சிறப்பு கருவிகளும் பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அமெரிக்காவின் ‘கிரைசிஸ் ரெஸ்பான்ஸ் இன்டர்நேஷனல்’ அமைப்பைச் சேர்ந்த 13 பேர் கொண்ட மீட்புக்குழு இந்திய குழுவினருடன் இணைந்துள்ளது. சுரங்கத்துக்குள் உயிருடன் இருப்பவர்களின் இருப்பிடத்தை கண்டறிவதற்காக உயர் தொழில்நுட்ப கேட்புக் கருவிகளை பயன்படுத்த அமெரிக்க குழு திட்டமிட்டுள்ளது. இதற்காக சிறப்பு பாதுகாப்பு மற்றும் மீட்பு நிபுணர்களையும் களத்தில் ஈடுபடுத்த உள்ளது.
இதற்கிடையே, நேபாளத்தில் இந்திய மீட்புக்குழுவினர் மேற்கொண்டு வரும் பணிகளுக்கு அமெரிக்க குழுவினர் பாராட்டு தெரிவித்துள்ளனர். கடுமையான சூழ்நிலையிலும் இந்திய குழுக்கள் தொடர்ந்து மேற்கொண்டு வரும் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
சுரங்கத்துக்குள் உண்மையில் எத்தனை பேர் சிக்கியுள்ளனர், அவர்களில் எத்தனை பேர் உயிருடன் உள்ளனர் என்பது இன்னும் தெளிவாக தெரியாத நிலையில், அவர்களை உயிருடன் மீட்பதற்கான முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: நேபாள வெள்ளம் பீகாருக்கு கொண்டு வந்த ஆபத்து? விஷமாக மாறும் மீன்கள்! மக்களுக்கு அரசு முக்கிய எச்சரிக்கை!