×
 

55 வழக்கு! 276 பேர் கைது!! நாடு முழுவதும் பயங்கரவாதத்துக்கு எதிராக சாட்டையை சுழற்றிய என்.ஐ.ஏ!

'நாடு முழுதும், கடந்த ஆண்டில் பயங்கரவாதிகளுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட, 55 வழக்குகளில், 276 பேர் கைது செய்யப்பட்டனர்' என, என்.ஐ.ஏ., எனும் தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது.

புதுடெல்லி: தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) 2025ஆம் ஆண்டை வெற்றிகரமான ஆண்டாக அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு முழுவதும் நாடு முழுவதிலும் பயங்கரவாதிகளுக்கு எதிராக 55 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 

இந்த வழக்குகளில் 276 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், பயங்கரவாதிகளுக்கு சொந்தமான 12 சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக என்.ஐ.ஏ. வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றவாளிகளுக்கு நீதிமன்றங்களில் தண்டனை பெற்றுத்தரும் விகிதம் 92 சதவீதமாக உயர்ந்துள்ளது என்பது என்.ஐ.ஏ.வின் மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது. 2008ஆம் ஆண்டு மும்பையில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலுக்கு சூத்திரதாரியாக செயல்பட்ட தஹாவூர் ராணாவை அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வருவதில் என்.ஐ.ஏ. வெற்றி பெற்றது. அதேபோல், அமெரிக்காவில் பதுங்கியிருந்த குற்றவாளி அன்மோல் பிஷ்னோயையும் நாடு கடத்தி இந்தியா கொண்டு வரப்பட்டார்.

இதையும் படிங்க: பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தானின் பங்கு!! என்ஐஏ விசாரணையில் வெளியான தகவல்கள்! குற்றப்பத்திரிகை தாக்கல்!

ஜம்மு-காஷ்மீரின் சுற்றுலாத் தலமான பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதல் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மத அடிப்படையில் சுற்றுலாப் பயணிகளை குறி வைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் ஈடுபட்ட மூன்று பயங்கரவாதிகளை என்.ஐ.ஏ. விசாரணைக்குப் பிறகு பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர். இந்த வழக்கில் என்.ஐ.ஏ. குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றது.

டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு வழக்கிலும் என்.ஐ.ஏ. பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. இந்த தாக்குதலில் 11 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய ஒன்பது குற்றவாளிகளை வெறும் இரண்டு மாதங்களுக்குள் கைது செய்து என்.ஐ.ஏ. தனது திறமையை நிரூபித்தது.

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் என்.ஐ.ஏ. தொடர்ந்து கடுமையாக செயல்பட்டு வருவதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள், பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்கள், நீதிமன்றங்களில் பெறப்பட்ட தண்டனைகள் ஆகியவை 2025ஆம் ஆண்டை என்.ஐ.ஏ.வுக்கு மறக்க முடியாத ஆண்டாக மாற்றியுள்ளன. நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பை வலுப்படுத்துவதில் இந்த வெற்றிகள் முக்கிய பங்கு வகிப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: வார்னிங்!! இந்தியாவை சிதைக்க திட்டமிடும் அசிம் முனீர்! போரை துவங்க திட்டம்!! வெளியான முக்கிய் தகவல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share