கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் திடீர் மரணம்? முதலமைச்சரே சொன்னதால் ஏழை மக்கள் பீதி..!
இளைஞர்களிடையே திடீர் மாரடைப்பு மரணங்கள் அதிகரித்திருப்பது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஹாசன் மாவட்டத்தில் குறைந்தது 20 பேர் மாரடைப்பால் இறந்ததாகக் கூறப்படுகிறது.
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் கடந்த மாதத்தில் மட்டும் 20க்கும் மேற்பட்டோர் மாரடைப்பால் உயிரிழந்தது கவலையை ஏற்படுத்தியது. பெரும்பாலும் இளைஞர்களே இதுபோன்ற மாரடைப்புகளால் உயிரிழந்துள்ளனர். அதுவும் அவர்களுக்கு இணை நோய் அல்லது வேறு அறிகுறிகள் எதுவுமே இல்லையாம்.. கர்நாடக மக்களிடையே இது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அடுத்து 10 நாட்களில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க முதலமைச்சர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து சித்தராமையா கூறியதாவது ; கடந்த ஒரு மாதத்தில், ஹாசன் மாவட்டத்தில் மட்டும் இருபதுக்கும் மேற்பட்டோர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளனர். இந்த விஷயத்தை அரசு மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளது.
இந்த தொடர் மரணங்களுக்கான சரியான காரணத்தை கண்டறிந்து, தீர்வுகளைக் கண்டறிய, ஜெயதேவா இருதய அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் ரவீந்திரநாத் தலைமையில் ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கொரோனாவை எதிர்க்கும் சக்தி தமிழர்களிடம் அதிகரிப்பு..! ஆய்வில் வெளியான அசரடிக்கும் தகவல்..!
மேலும் 10 நாட்களுக்குள் ஆய்வு அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதே குழுவிற்கு கடந்த பிப்ரவரி மாதமே, மாநிலத்தில் இளம் வயதினர் மத்தியில் திடீர் மரணங்களுக்கான காரணங்கள் மற்றும் கோவிட் தடுப்பூசிகளால் ஏதேனும் பாதகமான விளைவுகள் ஏற்படுமா என்பது குறித்து ஒரு முழுமையான ஆய்வு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது.
இந்த தொடர்பாக, இதய நோயாளிகளை பரிசோதிக்கும் மற்றும் பகுப்பாய்வு செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது. குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் தங்கள் முழு வாழ்க்கையும் எதிர்காலத்தில் இருக்கும் அப்பாவி மக்களின் உயிர்களுக்கும் நாங்களும் மதிப்பளிக்கிறோம், அவர்களின் குடும்பங்களின் கவலைகளை நாங்களும் பகிர்ந்து கொள்கிறோம்.
இதுபோன்ற விஷயங்களை தங்கள் அரசியல் ஆதாயங்களுக்காகப் பயன்படுத்தும் பாஜக தலைவர்களின் செயல்களை நான் கண்டிக்கிறேன். கோவிட் தடுப்பூசியை அவசரமாக அங்கீகரித்து பொதுமக்களுக்கு விநியோகித்தது இந்த மரணங்களுக்கு ஒரு காரணமாக இருக்கக்கூடும் என்பதை மறுக்க முடியாது. ஏனெனில் உலகெங்கிலும் சமீபத்திய ஆய்வுகள் கோவிட் தடுப்பூசிகள் மாரடைப்புகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று சுட்டிக்காட்டியுள்ளன.
இந்த விஷயத்தில் பாஜக எங்களை விமர்சிப்பதற்கு முன்பு, அவர்கள் தங்கள் மனசாட்சியை கேட்டுக்கொள்ள வேண்டும். ஹாசன் மாவட்டத்திலும் மாநிலம் முழுவதும் இந்த திடீர் தொடர் மரணங்களுக்குப் பின்னணியில் உள்ள உண்மையான காரணத்தைக் கண்டறிந்து அவற்றை தடுப்பதில் நாங்கள் முழுமையாக உறுதியாக உள்ளோம்.
ஒரு அரசாங்கமாக, மக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க நாங்கள் முடிந்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம். நெஞ்சுவலி அல்லது மூச்சு விடுவதில் சிரமம் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அருகிலுள்ள சுகாதார மையத்திற்குச் சென்று பரிசோதனை செய்து கொள்ளுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீர்கள் என்று தெரிவித்திருந்தார்.
தற்போது, கொரோனா தடுப்பூசிக்கும் உயிரிழப்புகளுக்கும் தொடர்பில்லை என மத்திய சுகாதார அமைச்சகம் தெளிவுபடுத்தியது. இது குறித்து, மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரோனா தடுப்பூசியால் பக்க விளைவுகள் மிகவும் அரிதாகவே இருக்கும். திடீர் மரணங்களுக்கு வாழ்க்கை முறையும் பிற நோய்களுமே காரணம் என ஆய்வில் தெரியவந்துள்ளது. கொரோனா தடுப்பூசிக்கும், உயிரிழப்புகளுக்கும் தொடர்பில்லை.
இளைஞர்களுக்கு ஏற்படும் மாரடைப்புக்கும், கொரோனா தடுப்பூசிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை.இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் எய்ம்ஸ் நடத்திய விரிவான ஆய்வுகள், கொரோனா வைரஸ் தடுப்பூசிகளுக்கும், திடீர் மரணங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை உறுதிப்படுத்தி உள்ளது.
இளைஞர்கள் திடீர் மரணம் அடைவது குறித்து, புதுடில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் உடன் இணைந்து ஆய்வு நடத்தியது. மரபியல், வாழ்க்கை முறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மாரடைப்பு ஏற்படலாம் என்பது தெரியவந்தது என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: மீண்டும் தலைதூக்கும் கொரோனா.. 7 ஆயிரத்தை நெருங்கும் பாதிப்பு.. பீதியில் மக்கள்..!