×
 

“இனி 100 நாட்கள் இல்லை”... 100 நாள் வேலை திட்டத்தில் அதிரடி மாற்றம்... மத்திய அரசு முக்கிய அறிவிப்பு...!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தின் கீழ் 100 நாட்கள் வேலை 125 நாட்களாக மாற்றப்படவுள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டம் கடந்த 2005ல் அமல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், 100 நாட்கள் வேலை உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில்,  நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இந்த சட்டத்திற்கு மாற்றாக புதிய சட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.  “விக்ஷித் பாரத் ஊரக வாழ்வாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு உறுதி சட்டம் - 2025” என்ற பெயரில் இச்சட்டம் கொண்டு வரப்பட உள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தை மறுசீரமைத்து, தகுதியுள்ள கிராமப்புற குடும்பங்களுக்கு உத்தரவாதமான வேலை நாட்களின் எண்ணிக்கையை தற்போது 100 லிருந்து 125 ஆக உயர்த்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. 'விக்ஷித் பாரத் ஊரக வாழ்வாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு உறுதி சட்டம் - 2025' என்ற பெயரில் கொண்டு வரப்படவுள்ள இச்சட்டத்தில், 100 நாட்கள் வேலையை 125 நாட்களாக உயர்த்த வகை செய்யப்பட்டுள்ளது. 

சட்டம் 100 நாட்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்திருந்தாலும், 2024-25 ஆம் ஆண்டில் இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு வீட்டிற்கு வழங்கப்படும் சராசரி வேலை நாட்கள் சுமார் 50 நாட்களாக மட்டுமே இருந்தன. உண்மையில், கடந்த ஆண்டு 100 நாட்களை நிறைவு செய்த குடும்பங்களின் எண்ணிக்கை 40.70 லட்சமாக இருந்தது. நடப்பு நிதியாண்டில், 6.74 லட்சம் குடும்பங்கள் மட்டுமே 100 நாள் உச்சவரம்பை எட்டியுள்ளன.

இதையும் படிங்க: காந்தியடிகள் மீது பாஜக அரசுக்கு வன்மம்... முதல்வர் ஸ்டாலின் சரமாரி குற்றச்சாட்டு...!

ஏப்ரல் 1, 2026 முதல் அமலுக்கு வரும் பதினாறாவது நிதி ஆணைய விருதுகளில் இந்தத் திட்டத்தைத் தொடர்வதற்கு அரசாங்கத்தால் ஏற்கனவே தொடங்கப்பட்ட ஒப்புதல் செயல்முறையின் பின்னணியில் இந்த திட்டம் வருகிறது. முன்மொழியப்பட்ட சட்டத்தின்படி, மத்திய அரசு இத்திட்டத்திற்கான 60 சதவீத செலவை ஏற்கும், மீதமுள்ள 40 சதவீத செலவை மாநில அரசுகள் ஏற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் உத்தரகண்ட், இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் ஆகிய மலைப்பகுதி மாநிலங்களைப் பொறுத்தவரை, மத்திய அரசு 90 சதவீதமும், மாநில அரசு 10 சதவீதமும் நிதி பகிர்வை மேற்கொள்ளும் என கூறப்பட்டுள்ளது. 

மேலும் 100 நாட்கள் வேலை திட்டத்தால் விவசாய வேலைகளுக்கு ஆள் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக நீடித்து வருகிறது. இதற்கும் மத்திய அரசு தீர்வு கண்டுள்ளது. இத்திட்டத்தை விதைப்பு மற்றும் அறுவடை காலத்திற்காக வருடத்திற்கு 2 மாதங்கள் மட்டும் நிறுத்திவைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அந்தந்த மாநில அரசுகள் தங்களது விவசாய பருவ காலங்களைப் பொறுத்து மத்திய அரசிடம் 60 நாட்களை முன்கூட்டியே சமர்ப்பிக்க வேண்டும், அது தொழிலாளர்களுக்கு முன்னதாகவே அறிவிக்கப்படும். இந்த காலகட்டத்தில் எந்த வேலையும் தொடங்கவோ அல்லது செயல்படுத்தவோ கூடாது என கட்டாய உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 100 நாள் வேலை திட்டத்தின் பெயர் மாற்றம்... பாஜகவின் தரம் தாழ்ந்த அரசியல்... செல்வப் பெருந்தகை கண்டனம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share