கலக்கத்தில் மீனவர் சமுதாயம்: ST பட்டியலில் சேர்க்க மாநில அரசு பரிந்துரைக்கவில்லை - மத்திய அரசு விளக்கம்!
மீனவர் சமுதாயத்தை ST பட்டியலில் சேர்க்க தமிழகத்திலிருந்து புதிய பரிந்துரை நிலுவையில் இல்லை என்று மத்தியப் பழங்குடியினர் விவகாரத்துறை இணையமைச்சர் தெரிவித்துள்ளார்.
மீனவர் சமுதாயத்தைப் பழங்குடியினர் (Scheduled Tribes - ST) பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை தொடர்பாக, மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது. இந்தப் பட்டியல் மாற்றமானது சம்பந்தப்பட்ட மாநில அரசின் பரிந்துரையின் மூலமாகவே தொடங்கப்பட வேண்டும் என்பதை மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம், மீனவர் சமூகத்தை ST பட்டியலில் சேர்க்கக் கோரி தமிழகத்திலிருந்து கோரிக்கை வந்துள்ளதா, அதன் நிலை என்ன என்று கேள்வி எழுப்பினார். இதற்கு மத்தியப் பழங்குடியினர் விவகாரத்துறை இணையமைச்சர் துர்காதாஸ் உய்கே எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்தார்.
மீனவர் சமுதாயத்தைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பது தொடர்பான எந்தவொரு புதிய பரிந்துரையும் தமிழக அரசிடமிருந்து மத்திய அமைச்சகத்திடம் நிலுவையில் இல்லை," என்று அவர் தெரிவித்தார். சமுதாயங்களிடமிருந்து இது தொடர்பாக ஏதேனும் கோரிக்கை மனுக்கள் வந்தால், அவை உடனடியாகச் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. ஏனெனில், மாநில அரசின் பரிந்துரையே பட்டியலில் சேர்க்கப்படுவதற்கு முதல் நிபந்தனை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 12 வங்கிகள் இனி இருக்காது! 4 பெரிய வங்கிகள் மட்டும் தான்.. மத்திய அரசின் மெகா திட்டம்!
ஒரு சமுதாயத்தைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கான நடைமுறையை மத்திய அரசு வகுத்துள்ளது. அதன்படி, அந்தப் பரிந்துரை முதலில் சம்பந்தப்பட்ட மாநில அரசு அல்லது யூனியன் பிரதேச நிர்வாகத்திடம் இருந்துதான் மத்திய அரசுக்குப் பரிந்துரைக்கப்பட வேண்டும்.
மாநில அரசிடமிருந்து வரும் பரிந்துரைகள், தேசியப் பழங்குடியினர் ஆணையம் மற்றும் இந்தியப் பதிவாளர் ஜெனரல் (RGI) ஆகியோரால் பரிசீலனை செய்யப்பட்டு, நியாயப்படுத்தப்பட வேண்டும். RGI-ஆல் பரிந்துரை ஏற்கப்படாவிட்டால், கூடுதல் தகவல்களைப் பெற்று மாநில அரசு அதனை மீண்டும் பரிசீலனைக்கு அனுப்பலாம்.
மீனவர் அமைப்புகளின் நீண்ட நாள் கோரிக்கையை நடைமுறைப்படுத்த, தமிழக அரசு புதிய பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்பினால் மட்டுமே அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடங்கும் என்பதை மத்திய அரசின் பதில் சுட்டிக்காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ராஜ் பவனைத்தொடர்ந்து பெயர் மாற்றப்பட்ட பிரதமர் அலுவலகம்.. மத்திய அரசின் புதிய அறிவிப்பு!