அந்தமானில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு.. ஆயில் இந்தியா நிறுவனம் அறிவிப்பு..!!
அந்தமான் கடல் பகுதியில் இயற்கை எரிவாயுப் படுகை இருப்பதாக ஆயில் இந்தியா நிறுவனம் கூறியுள்ளது.
அந்தமான் கடல் பகுதியில் இயற்கை எரிவாயு படுகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆயில் இந்தியா லிமிடெட் (OIL) நிறுவனம் அறிவித்துள்ளது. இது இந்தியாவின் ஆற்றல் துறையில் ஒரு மைல்கல் என அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். இந்த கண்டுபிடிப்பு, இந்தியாவின் இறக்குமதி சார்பினைக் குறைக்கும் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்தமான் ஷாலோ ஆஃப்-ஷோர் பிளாக் (AN-OSHP-2018/1) என அழைக்கப்படும் இந்தப் பகுதியில், ஸ்ரீ விஜயபுரம்-2 (Sri Vijayapuram-2) என்ற ஆராய்ச்சி கிணறில், 2,212 முதல் 2,250 மீட்டர் ஆழத்தில் இயற்கை எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டது. இந்தக் கிணறு அந்தமான் தீவுகளின் கிழக்குக் கரையில் இருந்து 9.20 கடல் மைல் (17 கி.மீ.) தொலைவில், 295 மீட்டர் நீர்நிலை ஆழத்தில் உள்ளது. இலக்கு ஆழம் 2,650 மீட்டர் என ஆயில் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: இனி நாடு முழுவதும் BSNL 4G சேவை.. தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி..!!
மேலும் இந்த கண்டுபிடிப்பு அப்பகுதியில் ஹைட்ரோகார்பன் வளம் இருப்பதை உறுதி செய்துள்ளதாகவும், அதன் அளவு மற்றும் வணிக ரீதியான பயன்பாடு குறித்து விரைவில் ஆய்வு செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளது. உற்பத்தி சோதனையின்போது ஏற்பட்ட இடைவெளி ஓட்டங்களில் சேகரிக்கப்பட்ட வாயு மாதிரிகள், காக்கினாடாவில் பரிசோதிக்கப்பட்டதில் 87% மீத்தேன் என உறுதிப்படுத்தப்பட்டது.
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, தனது எக்ஸ் தளத்தில், “அந்தமான் கடலில் ஆற்றல் வாய்ப்புகளின் பெருங்கடல் திறக்கிறது” எனக் கூறினார். இந்தக் கண்டுபிடிப்பு, மியான்மர் முதல் இந்தோனேசிய வரையிலான புவியியல் வளையத்தில் உள்ள வாயு போன்றது. இது இந்தியாவின் நீண்டகால நம்பிக்கையை உறுதிப்படுத்துகிறது என்றார்.
https://x.com/i/status/1971599478294503440
மேலும் இந்த கண்டுபிடிப்பு இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு முயற்சியில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனை என்று குறிப்பிட்டுள்ள அவர், அந்தமான் கடல் பகுதியில் அதிக இயற்கை எரிவாயு வளம் உள்ளது என்ற நீண்ட நாள் நம்பிக்கையை இது உறுதிப்படுத்தியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தின உரையில் அறிவித்த ‘சமுத்திர மந்தன்’ தேசிய டீப் வாட்டர் ஆராய்ச்சி மிஷன், இத்தகைய ஆராய்ச்சிகளை மேம்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தியா தற்போது தனது எண்ணெய் தேவையின் 88% மற்றும் இயற்கை எரிவாயுவின் 50% இறக்குமதி செய்கிறது. இந்தக் கண்டுபிடிப்பு, ஆற்றல் பாதுகாப்பை வலுப்படுத்தி, சுய சார்பு நோக்கத்தை முன்னெடுக்கும். ONGC உள்ளிட்ட நிறுவனங்கள் அந்தமான் பகுதியில் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து நடத்தி வருகின்றன. ஜூன் மாதம் அமைச்சர் பூரி, குவானா அளவிலான (18.44 லட்சம் கோடி லிட்டர்) எண்ணெய் கண்டுபிடிப்பு சாத்தியம் எனக் கூறியிருந்தார். இது இந்தியாவின் 20 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை நெருங்க உதவும்.
அசாம், ராஜஸ்தான், மகாநதி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பகுதிகளில் 57 கிணறுகளை அகழ்ந்து, அந்தமானில் 4,200 மீட்டர் ஆழம் வரை விரிவாக்கியுள்ளதாக ஆயில் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வெற்றி, உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்து, பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும். ஆராய்ச்சியாளர்கள், இது அந்தமான் பேசினை புதிய ஆற்றல் மையமாக மாற்றும் எனக் கருதுகின்றனர்.
இதையும் படிங்க: #BREAKING வரும் தேர்தல்ல ஒரு கை பார்த்துடலாம்.. நாமக்கல் மண்ணில் அடித்துப்பேசிய விஜய்..!!