×
 

ஓலா, ஊபரில் புக் செய்யும்போதே டிப்ஸ் கேட்கிறார்களா? அதிரடி ஆக்ஷனில் இறங்கி செக் வைத்த மத்திய அரசு!

ஓலா, ஊபர் மற்றும் ராபிடோ செயலிகளில் புக் செய்யும் போது, பயணத்திற்கு முன்பே டிப்ஸ் என்ற முறையில் கட்டணம் கேட்டு மெசேஜ் வருவதை நீக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி: ஓலா, ஊபர், ரேபிடோ உள்ளிட்ட செயலிகளில் பயணம் தொடங்குவதற்கு முன்பே ‘டிப்ஸ்’ அல்லது ‘அட்வான்ஸ் டிப்’ என்ற பெயரில் கூடுதல் கட்டணம் செலுத்துமாறு பயணிகளை வற்புறுத்தும் நடைமுறைக்கு மத்திய அரசு அதிரடி தடை விதித்துள்ளது. இதனால், கேப் மற்றும் பைக் டாக்சி பயணிகளிடம் முன்கூட்டியே கூடுதல் பணம் கேட்கும் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மொபைல் செயலிகள் மூலம் ஓலா, ஊபர், ரேபிடோ உள்ளிட்ட நிறுவனங்கள் கேப் மற்றும் பைக் டாக்சி சேவைகளை வழங்கி வருகின்றன. இந்நிலையில், சில செயலிகளில் வாகனத்தை முன்பதிவு செய்யும்போதோ அல்லது பயணம் தொடங்குவதற்கு முன்போ, ‘டிப்ஸ்’ வழங்குமாறு பயணிகளிடம் கேட்கப்படுவதாக புகார்கள் எழுந்தன.

இதையடுத்து, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம், மோட்டார் வாகன ஒருங்கிணைப்பாளர் வழிகாட்டுதல்களை மேற்கோள் காட்டி, இதுபோன்ற அம்சங்களை உடனடியாக நீக்குமாறு செயலி நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: "காவு வாங்கிய மனிதநேயம்"..! தற்கொலைக்கு முயன்றவரை காப்பாற்ற சென்ற கேக் கீப்பர் பலி..!! தஞ்சையில் சோகம்.!!

குறிப்பாக, பயணி வாகனத்தில் ஏறுவதற்கு முன்போ அல்லது டிரைவர் பயணத்தை ஏற்றுக்கொள்வதற்கு முன்போ ‘டிப்ஸ்’ கேட்கக்கூடாது. அதேபோல், கூடுதல் தொகையை செலுத்தினால் விரைவாக வாகனம் கிடைக்கும் அல்லது டிரைவர் பயணத்தை எளிதில் ஏற்றுக்கொள்வார் போன்ற தகவல்களையும் செயலிகளில் காட்டக்கூடாது என அரசு தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில், டிப்ஸ் வழங்குவது முற்றிலும் பயணியின் விருப்பமாக இருக்க வேண்டும். பயணம் முடிந்த பிறகு, கட்டணம் செலுத்தும் நேரத்தில் கூடுதல் தொகையை வழங்குவதற்கான வசதியை செயலிகள் வழங்கலாம். ஆனால், முன்பதிவின்போது பயணியிடம் கூடுதல் பணம் செலுத்துமாறு தூண்டவோ, கட்டாயப்படுத்தவோ கூடாது என மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

டிரைவர்களின் கட்டணப் பிரச்னைகள் மற்றும் பயணிகளிடம் இருந்து தொடர்ந்து வந்த புகார்களைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, கூடுதல் தொகை கொடுத்தால்தான் விரைவாக ரைடு கிடைக்கும் என்ற நிலை உருவாகக் கூடாது என்பதே இந்த உத்தரவின் முக்கிய நோக்கமாக பார்க்கப்படுகிறது.

இதனால், இனி ஓலா, ஊபர், ரேபிடோ போன்ற செயலிகளில் வாகனம் புக் செய்யும் போது “முதலில் டிப்ஸ் கொடுத்தால்தான் ரைடு கிடைக்குமா?” என்ற குழப்பம் பயணிகளுக்கு இருக்காது. பயணம் முடிந்த பிறகு, விருப்பமிருந்தால் மட்டுமே டிப்ஸ் வழங்க முடியும்.

இதையும் படிங்க: ஆசிட் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரயிலில் பயண சலுகை: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share