பொருளாதார வளர்ச்சி மட்டுமே நாட்டின் வளர்ச்சி ஆகாது! நீதித்துறை சீர்திருத்தம் குறித்து ஆளுநர் ஆவேச உரை!
இந்தியாவில் 5 கோடிக்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் இருப்பதற்கு நீதிபதிகள் மற்றும் நீதிமன்றங்களின் பற்றாக்குறையே காரணம் எனச் சென்னையில் நடைபெற்ற சட்ட மாணவர்கள் கருத்தரங்கில் தமிழக ஆளுநர் பேசினார்.
வண்டலூர் அடுத்த விஐடி சென்னை வளாகத்தில், தமிழ்நாடு சட்டக்கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்புடன் இணைந்து நடத்திய நீதிக்களம் என்ற இரண்டு நாள் தேசிய அளவிலான கருத்தரங்கு இன்று நிறைவடைந்தது. ‘வளர்ச்சியடைந்த இந்தியாவில் சட்டத்துறையின் பங்களிப்பு’ என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழக ஆளுநர் (பொறுப்பு) ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
தனது உரையைத் தொடங்குவதற்கு முன், அனைவருக்கும் வணக்கம், சகோதர சகோதரிகளே எனத் தமிழில் பேசி மாணவர்களை உற்சாகப்படுத்தினார். மேலும், தான் தமிழ் கற்றுக்கொள்ள அனைவரும் ஊக்கப்படுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
இந்தியாவில் தற்போது 5 கோடிக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதற்கு நீதிமன்றங்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதும், போதிய நீதிபதிகள் இல்லாததுமே முக்கியக் காரணம். சாதாரண மக்கள் எளிதாக நீதித்துறையை அணுகி நீதியைப் பெறுவதில் இன்னும் சிக்கல்கள் நீடிக்கின்றன. கல்வித்துறை சார்ந்த வழக்குகளும் பெருமளவில் நிலுவையில் இருப்பது கவலைக்குரியது.
இதையும் படிங்க: வண்டலூர் பூங்காவில் 10 நாட்கள் தடை! சிங்கம் மற்றும் மான் பகுதிகளுக்கு செல்ல அனுமதி மறுப்பு!
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி மட்டுமே அந்த நாட்டின் முழுமையான வளர்ச்சியாகாது. அனைத்துத் துறைகளிலும், குறிப்பாக நீதித்துறையிலும் வளர்ச்சி இருக்க வேண்டும். அனைவருக்கும் நீதி கிடைப்பதை உறுதி செய்யும் போதே அது வளர்ச்சியடைந்த தேசம் ஆகும். சட்ட மாணவர்கள் ஒழுக்க நெறிகளையும், மனிதநேயத்தையும் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்திய அவர், எளிய மக்களின் நலனில் அக்கறை கொண்டு செயல்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
இந்த விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி குமரேஷ் பாபு, விஐடி நிறுவனர் மற்றும் வேந்தர் முனைவர் கோ.விசுவநாதன், உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், எஸ்.ஸ்ரீமதி, டி.பாரத சக்கரவர்த்தி, எல்.சி. விக்டோரியா கவுரி மற்றும் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டு உரையாற்றினர். தமிழகம் முழுவதிலும் இருந்து 700-க்கும் மேற்பட்ட சட்ட மாணவர்கள் இக்கருத்தரங்கில் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: மத்திய கிழக்கு போரில் 6 இந்தியர்கள் பலி! மாயமான ஒருவரை தேடும் பணி தீவிரம்!