8.7 கோடி இளைஞர்கள் வேலையின்றி முடக்கம்! நிதி ஆயோக் வெளியிட்ட அதிர்ச்சி புள்ளிவிவரம்!
இந்தியாவில் 8.7 கோடி இளைஞர்கள் படிப்போ வேலையோ அல்லது எந்தவித தொழில் பயிற்சியோ இல்லாமல் முடங்கியுள்ளனர் என நிதி ஆயோக் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் 15 முதல் 29 வயதுக்குட்பட்ட சுமார் 8.7 கோடி இளைஞர்கள் உயர் படிப்போ, முறையான வேலையோ அல்லது எவ்விதத் தொழில் பயிற்சியோ இன்றி முழுமையாக முடங்கியுள்ளதாக மத்திய அரசின் திட்டக் கொள்கை வகுக்கும் அமைப்பான நிதி ஆயோக் (NITI Aayog) வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் அதிர்ச்சித் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'2047-ல் வளர்ந்த பாரதத்திற்கான திறனை மீண்டும் கட்டமைத்தல்' என்ற தலைப்பில் நிதி ஆயோக் வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையில், நாட்டின் மனிதவள ஆற்றல் குறித்த முக்கியப் புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அதன்படி, நாட்டில் உள்ள இளைஞர்களில் சுமார் 9 கோடி பேர் எவ்வித வேலைவாய்ப்பும் இன்றித் தவித்து வரும் சூழலில், கல்லூரிகளில் பட்டம் பெற்ற பட்டதாரிகளில் வெறும் 8.25 சதவீதம் பேர் மட்டுமே தங்களது கல்வித் தகுதிக்கு இணையான பணிகளில் சேர்ந்துள்ளனர் என்ற கசப்பான உண்மை வெளிவந்துள்ளது.\
நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் இளைஞர்களின் கற்றல் திறன், தகுதிக்கேற்ற ஊதியம் ஈட்டும் வாய்ப்பு மற்றும் தொடர்ச்சியான தொழில் முன்னேற்றம் ஆகியவை மட்டுமே 2047-க்குள் இந்தியாவை ஒரு வளர்ந்த நாடாக மாற்றும் இலக்கை எட்ட உதவும் என அவ்வறிக்கையில் அழுத்தமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. படித்த இளைஞர்களின் கல்வித் தகுதிக்கும் சந்தையில் தேவைப்படும் தொழிற் திறன்களுக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி நிலவுவதே இந்த வேலையின்மைப் பிரச்சினைக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "ஜென் Z இளைஞர்களைக் கவர ரீல்ஸ் போடுங்க!" - மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி உத்தரவு!
எனவே, இந்த இக்கட்டான சூழலைச் சரிசெய்ய இளைஞர்களிடையே சுயதொழில் மற்றும் தொழில்முனைவோர் திறன்களை உருவாக்குவதை அரசு உடனடியாக ஊக்குவிக்க வேண்டும் எனவும், கல்வி நிறுவனங்களில் தொழிற்கல்வி மற்றும் செயல்முறைத் திறன் பயிற்சிகளைப் பாடத்திட்டத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக மாற்ற மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் துரித நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் நிதி ஆயோக் திட்டவட்டமாகப் பரிந்துரைத்துள்ளது.
இதையும் படிங்க: அறநிலையத்துறையை வேவு பார்க்கிறார் சேகர்பாபு! அமைச்சர் ரமேஷ் அதிரடி குற்றச்சாட்டு!