கேட்பாரற்று கிடக்கும் ரூ.9,300 கோடி! செயல்படாத 31 லட்சம் PF கணக்குகள்! உரிமைகோர ஆளில்லை!
பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்குகளில், 31 லட்சம் கணக்குகள் செயல்படாதவை எனவும், அவற்றில், 9,300 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை கோரப்படாமல் முடங்கிக் கிடப்பதும் தெரியவந்துள்ளது.
நாடு முழுவதும் செயல்படாமல் உள்ள வருங்கால வைப்பு நிதி (EPF) கணக்குகளில் ரூ.9,300 கோடிக்கும் அதிகமான தொகை கோரப்படாமல் முடங்கிக் கிடப்பதாக தகவல் அறியும் உரிமை (RTI) சட்டத்தின் கீழ் வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் அதிகாரப்பூர்வ தகவலின்படி, 2026 மார்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி 30.91 லட்சத்துக்கும் அதிகமான செயல்படாத பி.எப். கணக்குகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால பாதுகாப்புக்காக மத்திய அரசு வருங்கால வைப்பு நிதி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் நிர்வகித்து வருகிறது. அண்மையில் அமல்படுத்தப்பட்ட புதிய நடைமுறையின்படி, மாதம் ரூ.15,000 அடிப்படை சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு மட்டுமே 12 சதவீத பி.எப். பங்களிப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
RTI மூலம் பெறப்பட்ட தகவலின்படி, தற்போது 30.91 லட்சம் செயல்படாத பி.எப். கணக்குகளில் ரூ.9,330 கோடிக்கும் அதிகமான தொகை யாராலும் கோரப்படாமல் உள்ளது. கடந்த ஆண்டு 31.83 லட்சம் செயல்படாத கணக்குகளில் ரூ.10,181 கோடி முடங்கியிருந்த நிலையில், இந்த ஆண்டு கணக்குகளின் எண்ணிக்கையும் தொகையும் ஓரளவு குறைந்துள்ளது.
இதையும் படிங்க: பிஎஃப் பணம் எடுக்க முடியாது! 3 நாட்கள் முடங்கியது சேவை! EPFO வெளியிட்ட முக்கிய அப்டேட்!
பொருளாதார நிபுணர்கள் கூறுகையில், இந்த ரூ.9,300 கோடி தொகை மத்திய அரசின் ‘ஜன் ஆரோக்கியா’ மக்கள் சுகாதார திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதிக்கு நிகரானது. மேலும், இந்த தொகையை கொண்டு மூன்று இந்திய தொழில்நுட்பக் கழகங்களை (IIT) அமைக்கும் அளவுக்கு நிதி மதிப்பு இருப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
பணி மாற்றத்தின் போது பழைய பி.எப். கணக்கை புதிய கணக்குடன் இணைக்காதது, யு.ஏ.என். (Universal Account Number) எண்ணை மறந்துவிடுவது, கணக்கு வைத்திருப்பவர் உயிரிழந்த பிறகு வாரிசுகள் பணத்தை கோராதது மற்றும் 36 மாதங்களுக்கும் மேலாக எந்த பங்களிப்பும் செலுத்தப்படாதது போன்ற காரணங்களால் இந்த கணக்குகள் செயல்படாத நிலைக்குச் செல்கின்றன.
சட்ட விதிகளின்படி ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக யாரும் உரிமை கோராத தொகைகள் மூத்த குடிமக்கள் நல நிதிக்கு மாற்றப்படும். இருப்பினும், சமீபத்திய கொள்கை மாற்றத்தின்படி செயல்படாத கணக்குகளுடன் இணைக்கப்பட்டுள்ள வங்கி கணக்குகளுக்கு பணத்தை திருப்பிச் செலுத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், ‘உங்கள் பணம், உங்கள் உரிமை’ என்ற திட்டத்தின் மூலம் கணக்கு வைத்திருப்போர் மற்றும் அவர்களது வாரிசுகளை கண்டறிந்து, அவர்களுக்கு பணத்தை வழங்க மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதையும் படிங்க: இந்தியாவை சீரழிக்க சதி! பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு! குஜராத்தில் 8 பேர் கைது!