இந்தியாவை சீண்டும் பாகிஸ்தான்.. போர் பதற்றத்திற்கு மத்தியில் ஏவுகணை சோதனை..!
காஷ்மீர் தாக்குதலால் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், தற்போது பாலிஸ்டிக் ஏவுகணையை சோதனை செய்து பதற்றத்தை பல மடங்கு அதிகரித்து இருக்கிறது பாகிஸ்தான்.
காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பாவின் கிளையான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் என்ற அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டது. இதனை அடுத்து, பயங்கரவாதிகளை ஒடுக்கும் பணி தீவிரம் அடைந்துள்ளது. பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் என முக்கிய பொறுப்பில் இருக்கும் தலைவர்களுடன் அடுத்தடுத்து ஆலோசனை நடத்தினார். பாகிஸ்தான் மீது குற்றம் சாட்டியுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்தார்.
அதன் எதிரொலியாக பாகிஸ்தான் உடனான துாதரக உறவு துண்டிப்பு, சிந்து நதி நீர் நிறுத்தம், பாகிஸ்தானியர்களுக்கான விசா ரத்து என அடுத்தடுத்த உத்தரவுகளை மத்திய அரசு பிறப்பித்தது. ராணுவ தளபதி திவேதி ஸ்ரீநகர் சென்று கள நிலவரம் குறித்து ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கவர்னர் சின்ஹாவை சந்தித்து, அடுத்த கட்ட நடவடிக்கைக்கு ராணுவம் தயாராக இருப்பதாகவும் கூறினார். பாகிஸ்தான் நாட்டவருக்கான அனைத்து வகை விசாக்களையும் மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இதன் காரணமாக இருநாட்டிற்கும் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எல்லையில் தினம்தோறும் இருநாட்டு ராணுவ வீரர்களிடயே துப்பாக்கிச்சூடு நடந்து வருகிறது.
இதையும் படிங்க: முடிச்சுவுட்டீங்க போங்க.. பாகிஸ்தானுக்கு எழவே முடியாத அடி.. செக் வைத்த இந்தியா..!
இந்திய கடற்படை விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந் அரபிக்கடலில் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் எந்த நேரத்திலும் பாகிஸ்தானுக்குள் புகுந்து நம் ராணுவம் தாக்குதல் நடத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படியொரு பதற்றமான சூழலிலும் தொடர்ந்து இந்தியாவை சீண்டும் வகையில் பாகிஸ்தான் நடந்துகொள்கிறது. குறிப்பாக அந்நாட்டின் அமைச்சர்களும் ராணுவ தளபதியும் வாய்ச்சவடால் பேசி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக இப்போது பாலிஸ்டிக் ஏவுகணையை சோதனை செய்து பதற்றத்தை பல மடங்கு அதிகரித்து இருக்கிறது பாகிஸ்தான்.
‛Exercise Indus’ என்ற பெயரில் நடந்த போர் பயிற்சியின் ஒரு அங்கமாக இன்று இந்த சோதனை நடந்திருக்கிறது. பாகிஸ்தான் சோதித்த ஏவுகணையின் பெயர் அப்தாலி வெப்பன் சிஸ்டம். இது ஒரு பாலிஸ்டிக் வகை ஏவுகணை. தரையில் இருந்து பறந்து சென்று நிலப்பரப்பை தாக்கும் சக்தி கொண்டது. அதிகபட்சமாக சுமார் 450 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று இலக்கை தாக்கும் என்று பாகிஸ்தான் ராணுவம் கூறி உள்ளது. பாகிஸ்தான் நடத்திய ஏவுகணை சோதனை தொடர்பான வீடியோக்களை அந்த நாட்டின் மீடியாக்கள் வெளியிட்டு வருகின்றன.
அப்தாலி ஏவுகணையை வைத்து இந்தியாவின் எல்லை பகுதியில் உள்ள ராணுவ முகாம்கள் மற்றும் முக்கிய இடங்களை குறி வைக்க முடியும். ஏற்கனவே பஹல்காம் பயங்கரவாத தாக்குதலால் இந்தியா கொதிப்பில் இருக்கிறது. பாகிஸ்தானுக்கு உரிய பதிலடி கொடுக்க வேண்டும் என்ற கோஷம் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒலிக்கிறது.
இப்படியொரு பதற்றமான நேரத்தில் பாகிஸ்தான் எந்த விதமான ஏவுகணையை சோதித்தாலும், அது இந்தியாவை ஆத்திரமூட்டும் செயலாகவே பார்க்கப்படும் என்று நம் பாதுகாப்புத்துறை வட்டாரம் கூறியது. பாகிஸ்தான் இப்போது செய்து வரும் எல்லா செயல்களுக்கும் சேர்த்தே இந்தியாவின் பதிலடி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அலார்ட்டா இருங்க..! எல்லாம் தயாரா இருக்கட்டும்..! மக்களுக்கு பாக்., அரசு ரகசிய தகவல்..!