காஷ்மீர் தாக்குதலோடு முடியப்போறது இல்லை.. பாக்., ஐ.எஸ்.ஐ-யின் அடுத்த பிளான் தெரியுமா? பகீர் கிளப்பும் என்.ஐ.ஏ!!
பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள், காஷ்மீரில் பதுங்கி இருப்பதாகவும், மீண்டும் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாகவும் என்.ஐ.ஏ முகமை எச்சரித்து உள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த 22ம் தேதி இந்திய ராணுவனத்தினர் போல் சீருடை அணிந்து வந்த பயங்கரவாதிகள் திடீர் துப்பாக்கி சூடு நடத்தியதில் 26 பேர் இறந்தனர். 17 பேர் காயமடைந்தனர். இந்த துயர சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டன்ட் ஃபோர்ஸ் என்ற பயங்கரவாத அமைப்பு இதற்கு பொறுப்பேற்று உள்ளது. உலக தலைவர்கள் உள்பட பலரும் தாக்குதல் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தனர். இதனை அடுத்து, பயங்கரவாதிகளை ஒடுக்கும் பணி தீவிரம் அடைந்துள்ளது.
பஹல்காம் தாக்குதல் குறித்து விசாரணை நடத்த என்ஐஏ அதிகாரிகள் அடங்கிய குழு காஷ்மீர் விரைந்தது. என்.ஐ.ஏ.வின் ஐ.ஜி., டி.ஐ.ஜி., போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் கண்காணிப்பில் பல்வேறு என்.ஐ.ஏ. குழுக்கள் விசாரணையில் ஈடுபட்டுள்ளன. பைசரன் பசுமை பள்ளத்தாக்கின் நுழைவு மற்றும் வெளியேறும் பகுதிகளில் சல்லடை போட்டு அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். துப்பாக்கிச் சூடு சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடமும், பலியானவர்களின் குடும்பத்தினரையும் நேரில் சந்தித்து தகவல்களை திரட்ட பல்வேறு என்.ஐ.ஏ. குழுக்கள் நாடு முழுவதும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.
இதையும் படிங்க: இதுக்கும் தடையா..? அடி மேல் அடி கொடுக்கும் இந்தியா.. திணறும் பாகிஸ்தான்..!
இப்போது முதல் கட்ட விசாரணையை என்ஐஏ முடித்து இருக்கிறது. இதில் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயின் தொடர்பு உறுதி செய்யப்பட்டு இருப்பதாக முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. சம்பவம் நடந்த பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் கடை, ஓட்டல் வைத்திருந்தவர்கள், அங்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் உட்பட இதுவரை 2800 பேரிடம் என்.ஐ.ஏ விசாரித்து உள்ளது. இதில் 150க்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் இன்னும் என்ஐஏ கஸ்டடியில் இருக்கின்றனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன.
குறிப்பாக 20 லோக்கல் பயங்கரவாதிகள், தாக்குதல் நடத்திய 4 பயங்கரவாதிகளுக்கும் எல்லா உதவிகளையும் செய்து கொடுத்துள்ளனர். இவர்களில் சிலரை பிடித்து விட்டதாகவும் மற்றவர்களை தேடி வருவதாகவும் என்.ஐ.ஏ தெரிவித்து உள்ளது. பிடிபட்ட லோக்கல் பயங்கரவாதிகளை விசாரித்த போது தான், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ தொடர்பு உறுதியானது. அதாவது, ஐஎஸ்ஐ தான் இந்த திட்டத்தை வகுத்து கொடுத்துள்ளது. பாகிஸ்தானில் உள்ள லஷ்கர் இ தொய்பா தலைமையகத்தில் தான் திட்டம் தயாராகி உள்ளது. ஐஎஸ்ஐ அமைப்பின் 2 முக்கிய அதிகாரிகள் பயங்கரவாதிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கின்றனர்.
அவர்களும், லஷ்கர் அமைப்பின் தலைவர்களும் பாகிஸ்தானில் இருந்தபடி தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு உத்தரவுகளை வழங்கி வந்தனர். தாக்குதல் நடத்திய 4 பேரில் 2 பேர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்பது உறுதி ஆகி உள்ளது. ஒருத்தன் பாகிஸ்தான் கமாண்டோ படையில் இருந்த ஹாஷிம் மூசா; இன்னொருத்தன் அலி பாய். இவர்களுக்கு தான் பாகிஸ்தானில் இருந்தபடி டைரக்சன் வழங்கப்பட்டு வந்திருக்கிறது. குறிப்பாக எளிதில் கண்டுபிடிக்க முடியாது என்பதால், சாட்டிலைன் போன் மூலம் அவர்கள் தொடர்பு கொண்டிருக்கின்றனர்.
சம்பவம் நடந்த பைசரன் பள்ளத்தாக்கு பகுதியை சுற்றி சம்பவம் நடந்த நாளில் 3 சாட்டிலைட் போன் ஆக்டிவாக இருந்ததை உறுதி செய்துள்ளோம். இதில் 2 போனின் சிக்னலை கண்டுபிடித்து விட்டோம். அடுத்த கட்ட விசாரணைக்கு இது உதவியாக இருக்கும். அதே போல் பஹல்காம், பைசரன் பள்ளத்தாக்கு பகுதிகளில் உள்ள செல்போன் டவர் பதிவுகளை ஆய்வு செய்து வருகிறோம். சம்பவ நேரத்துக்கு முன்னும், பின்னும் பதிவான செல்போன் அழைப்புகள், நம்பர்களை சேகரித்து வருகிறோம். அதில் தாக்குதலுக்கு தொடர்பு இருப்பவர்கள் பற்றி மேலும் விவரம் கிடைக்க கூடும் என என்.ஐ.ஏ தெரிவித்து உள்ளது.
தாக்குதல் நடப்பதற்கு ஒரு வாரம் முன்பே பஹல்காம் வந்த பயங்கரவாதிகள் 4 இடங்களை வேவு பார்த்து, இறுதியாக பைசரன் பள்ளத்தாக்கை தேர்வு செய்து உள்ளனர். இந்த 7 நாட்களும் உள்ளூர் பயங்கரவாதிகளின் உதவி பெரிய அளவில் இருந்திருக்கிறது. இப்போது அடர்ந்த காட்டுக்குள் பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கின்றனர். கடந்த ஆண்டு அக்டோபரில் கந்தர்பால் மாவட்டத்தின் சோனமார்க் பகுதியில் சுரங்கப்பாதை பணியில் ஈடுபட்டு இருப்பவர்கள் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதலிலும் இதே பயங்கரவாதிகள் ஈடுபட்டு இருக்கின்றனர். அந்த தாக்குதலில் ஒரு டாக்டர், 6 தொழிலாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இதில் ஈடுபட்ட பயங்கரவாதிகளின் ஜுனைத் அகமது பட் என்ற ஒருத்தன் மட்டும் சிக்கினான். அவன் அப்போதே என்கவுன்டர் செய்யப்பட்டு விட்டான். பைசரன் தாக்குதலில் மாஸ்டர் மைன்ட் ஆக இருக்கும் ஹாஷிம் மூசா தான், 7 பேர் கொல்லப்பட்ட சம்பவத்திலும் மூளையாக இருந்திருக்கிறான். எனவே இன்னும் நிறைய தாக்குதல் திட்டத்துடன் இவர்களை காஷ்மீருக்குள் பாகிஸ்தான் அனுப்பி இருக்க வேண்டும் என்று சந்தேகிக்கிறோம் என என்ஐஏ வட்டாரம் தெரிவித்து உள்ளது.
இதையும் படிங்க: பொறுமையா போங்க, பேரழிவு ஏற்படும்..! இந்தியா, பாக்.-ஐ பதற்றத்தை தணிக்க ஐ.நா. வேண்டுகோள்..!