காஷ்மீர் பிரச்சினையில் மூக்கை நுழைக்க விரும்பும் ட்ரம்ப்.. விழுந்து அடித்து வரவேற்கும் பாகிஸ்தான்.!!
காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வது தொடர்பாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்த கருத்துக்கு பாகிஸ்தான் அரசு நன்றி தெரிவித்துள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வது தொடர்பாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்த கருத்துக்கு பாகிஸ்தான் அரசு நன்றி தெரிவித்துள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுகுப் பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடங்கியது. 4 நாள் நீடித்த தாக்குதலுக்குப் பிறகு இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த புரிந்துணர்வு ஏற்பட்டது. இதன் பின்னணியில் அமெரிக்கா முக்கிய பங்காற்றியது.
இந்நிலையில் சமூக ஊடகத்தில் ட்ரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், "இந்த வரலாற்று சிறப்பான மற்றும் வீரதீரமிக்க முடிவினை எடுப்பதில் அமெரிக்கா உங்களுக்கு (இந்தியா, பாகிஸ்தான்) உதவ முடிந்ததில் நான் பெருமையடைகிறேன். இன்னும் விவாதிக்கப்படாவிட்டாலும், இரண்டு பெரிய நாடுகளுடனும் கணிசமான அளவில் வணிகத்தை அதிகரிக்கப்போகிறேன்." என்று தெரிவித்திருந்தார்.
ட்ரம்ப் கருத்து தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் அதன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில், "இந்தியா, பாகிஸ்தான் உறவு குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் அறிக்கையை பாகிஸ்தான் வரவேற்கிறது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சமீபத்திய போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஆதரிப்பதில் அமெரிக்கா மற்றும் பிற நட்பு நாடுகள் ஆற்றிய முக்கியமான பங்களிப்பை பாகிஸ்தான் பாராட்டுகிறது. இது பிராந்திய ஸ்திரத்தன்மையை பேணுவதற்கான ஒரு படியாகும்.
தெற்காசியாவிலும் அதற்கு அப்பாலும் அமைதி மற்றும் பாதுகாப்புக்கு கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தும் நீண்ட கால பிரச்சினையான காஷ்மீர் சிக்கலைத் தீர்ப்பதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முன்வந்திருப்பதற்கு எங்களின் பாராட்டுகள். ஜம்மு காஷ்மீர் பிரச்சினைக்கான எந்த ஒரு நியாயமான, நீண்டகால தீர்வும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானத்தின் படி இருக்க வேண்டும். மேலும், ஜம்மு காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமைகள் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை உறுதி செய்வதாக இருக்க வேண்டும் என்பதை பாகிஸ்தான் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு மற்றும் வளத்தினைப் பேணுவதற்கான முயற்சிகளில் அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகளுடன் ஈடுபடுவதற்கு பாகிஸ்தான் உறுதி பூண்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது. ட்ரம்ப்பின் கருத்தை இந்தியா நிராகரித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'உங்கள் வேலையை மட்டும் பாருங்கள்'..! பாக்., விவகாரத்தில் உலக நாடுகளுக்கு இந்தியா விடுத்த எச்சரிக்கை..!
இதையும் படிங்க: பாக்-உடன் போர் நிறுத்தம்... இந்தியாவுக்கு மத்தியஸ்தம் செய்ய டிரம்ப் யார்..? சந்தேகம் கிளப்பும் எதிர்கட்சிகள்..!