பழனி நில மோசடி விவகாரத்தில் அதிரடி திருப்பம்... சிபிசிஐடி விசாரணை வளையத்தில் முக்கிய புள்ளி...!
பழனி கோயில் ரூபாய் 100 கோடி நில மோசடி விவகாரம்: சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜர்
பழனி தண்டபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமான சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான நிலம், நீதிமன்ற உத்தரவை மீறி போலி ஆவணங்கள் மூலம் ரூ.2 கோடிக்கு மோசடி பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில், சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் இன்று திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரானார்.
பழனி அடிவாரம் சந்நிதி வீதியில் அமைந்துள்ள அருள்மிகு தண்டபாணி சுவாமிகள் மடத்தின் நில மோசடி தொடர்பாக, பழனி கோயில் நிலங்கள் பிரிவு கண்காணிப்பாளர் ச.முருகானந்தம் அளித்த புகாரின் பேரில் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், போலி டிரஸ்ட் பிரமுகர் முருகதாஸ் உள்ளிட்ட 4 பேர் மீது பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தமிழக அரசின் உத்தரவைத் தொடர்ந்து, கடந்த 15.07.2026 அன்று இவ்வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி டிஎஸ்பி அஜய் தங்கம் தலைமையில் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. தென்மண்டல எஸ்பி சாஜிதா நேரடியாக வருகை தந்து, கோயில் செயல் அலுவலர் கணபதி உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினார்.
இதையும் படிங்க: பழனி நில மோசடி.. 6வது நாளாக இறுகும் சிபிசிஐடி பிடி... 4 முக்கிய புள்ளிகளிடம் துருவி துருவி விசாரணை...!
இவ்வழக்கு தொடர்பாக, கோயில் முன்னாள் இணை ஆணையர் மாரிமுத்து, ஓய்வுபெற்ற தாசில்தார் மாரியப்பன், ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அதிகாரி சின்னச்சாமி, அறநிலையத்துறை ஆய்வாளர் சிவனேசன் ஆகியோரிடம் 6 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டு, 1880-ஆம் ஆண்டு முதலாக உள்ள ஆவணங்கள் பெறப்பட்டன.
மேலும் வருவாய்த் துறை அலுவலர்கள் சார்பில் நிலத்தின் பல்வேறு காலகட்ட நில வகைப்பாடு (Land Classification) தொடர்பான ஆதார ஆவணங்கள் சிபிசிஐடி அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்பட்டன.
ஆக்கிரமிப்பில் இருந்த கடைகளுக்கு எந்த ஆவணங்களின் அடிப்படையில் மின் இணைப்பு வழங்கப்பட்டது என்பது குறித்து விளக்கம் கேட்டு மின்வாரியத்திற்கு சிபிசிஐடி நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அதனடிப்படையில் மின்வாரியத்திடம் இருந்து பெறப்பட்ட ஆவணங்களை சிபிசிஐடி அதிகாரிகள் திண்டுக்கல் அலுவலகத்தில் வைத்து தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனுக்கு உயர்நீதிமன்ற கிளை ஏற்கனவே நிபந்தனை ஜாமின் வழங்கியிருந்தது. அந்த உத்தரவின்படி, சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் இன்று திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானார்.
இதையும் படிங்க: பழனி கோயில் நிலத்தை பட்டா போட துணிந்தது எப்படி?... முக்கிய நபர்களை சுற்றி வளைக்க காய் நகர்த்தும் சிபிசிஐடி...!