×
 

மகாராஷ்டிரா: மகளின் முதல் பிறந்தநாள் கொண்டாட்டம்.. அடுத்த நொடி குடும்பமே மண்ணில் புதைந்த கோரம்..!!

மகாராஷ்டிராவின் பால்கரில் 4 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்ததில் பலி எண்ணிக்கை 15ஆக உயர்ந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், பால்கர் மாவட்டத்தின் விரார் பகுதியில் உள்ள விஜய் நகர் பகுதியில் நான்கு மாடிகளைக் கொண்ட ராமாபாய் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் ஆகஸ்ட் 26ம் தேதி நள்ளிரவு 12:05 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது. இதில் பல பேர் உயிரிழந்த நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் காயமடைந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

குறிப்பாக அந்த குடியிருப்பில் தனது மகளின் முதல் பிறந்தநாளை மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடிய ஒரு குடும்பம் சில மணி நேரங்களிலேயே மண்ணில் புதைந்தது. விபத்து நடந்தபோது, கட்டிடத்தின் நான்காவது மாடியில் பிறந்தநாள் விழா நடைபெற்று கொண்டிருந்தது. விருந்தினர்கள் உட்பட பலர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். 

இதையும் படிங்க: கணபதி பப்பா மோரியா!! விநாயகர் சதுர்த்தி இனி மாநில விழா!! மகாராஷ்டிரா அரசு அசத்தல் அறிவிப்பு!!

கட்டிடத்தின் பின்பகுதி, அருகிலுள்ள காலியான குடியிருப்பின் மீது விழுந்ததாக தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) தெரிவித்துள்ளது. முதற்கட்ட விசாரணையில், இந்த கட்டிடம் சட்டவிரோதமாக கட்டப்பட்டதாகவும், கட்டுமானத்தில் தரமற்ற பொருட்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, கட்டிடக் கலைஞர் நிடல் கோப்நாத் சானேவை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து தகவலறிந்து உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற உள்ளூர் மாநகராட்சி குழுவினர், தீயணைப்பு வீரர்கள் மற்றும் NDRF படையினர் உடனடியாக மீட்புப் பணிகளைத் தொடங்கினர். 20 மணி நேரத்திற்கும் மேலாக மீட்பு பணிகள் தொடர்ந்த நிலையில், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சிகள் தீவிரமாக நடைபெற்றன. காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர், மேலும் சிலர் இன்னும் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

இந்த விபத்து, மகாராஷ்டிராவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட கட்டிட விபத்துகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க, கட்டுமான விதிமுறைகளை கடுமையாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்த துயர சம்பவம், பாதுகாப்பான கட்டிடங்களின் முக்கியத்துவத்தை மீண்டும் உணர்த்தியுள்ளது. 

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த மாநில அரசு, காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என உறுதியளித்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

இதையும் படிங்க: அடுத்த 48 மணி நேரம் ரொம்ப முக்கியம்!! கனமழையால் தவிக்கும் மும்பை.. முதல்வர் பட்னாவிஸ் அட்வைஸ்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share