×
 

5வது நாளாக தொடரும் எதிர்க்கட்சிகளின் அமளி.. நாடாளுமன்ற இரு அவைகளும் மீண்டும் ஒத்திவைப்பு!

மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதித்துள்ள இந்தக் கசிவு விவகாரத்தில் அரசு பொறுப்பேற்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு வினாத்தாள் கசிவு பிரச்னை மற்றும் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் எனக் கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நான்கு நாட்களாக தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அவை நடவடிக்கைகள் முடக்கப்பட்டுள்ள நிலையில், வெள்ளிக்கிழமையான இன்றும் எதிர்க்கட்சியினர் தங்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்தினர்.

‘இந்தியா’ கூட்டணியைச் சேர்ந்த எம்பிக்கள் காலை 10.30 மணியளவில் நாடாளுமன்ற வளாகத்தில் திரண்டு உரத்த முழக்கங்களுடன் ஆர்ப்பாட்டம் செய்தனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர். மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதித்துள்ள இந்தக் கசிவு விவகாரத்தில் அரசு பொறுப்பேற்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

மக்களவை காலை 11 மணிக்கு கூடியதும் இந்தியா கூட்டணி எம்பிக்கள் அமளியைத் தொடங்கினர். இதனால் சபை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் கூடிய பிறகும் அமளி தொடர்ந்ததால், இறுதியில் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. அதேபோல் மாநிலங்களவையிலும் தொடர் அமளி நிலவியதால் அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

இதையும் படிங்க: "அடக்குமுறையால் இளைஞர்களின் குரலை ஒடுக்க முடியாது!" டெல்லியில் CJP மீதான தடியடிக்கு திமுக  கண்டனம்!

இந்தச் சூழலில், பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் கிரண் ரிஜிஜு, ராகுல் காந்தியிடம் பேசி, நீட் விவகாரம் குறித்து விரிவான விவாதத்துக்கு அரசு தயாராக இருப்பதாகவும், அவை இயங்க அனுமதிக்குமாறும் கோரிக்கை விடுத்தார். ஆனால் எதிர்க்கட்சிகள் இதனை ஏற்க மறுத்து, அமைச்சரின் ராஜினாமாவை வலியுறுத்தி அமளியைத் தொடர்ந்தன. 

இந்த நீட் சர்ச்சை காரணமாக பல மாநிலங்களில் மாணவர்கள் போராட்டங்களும், விசாரணைகளும் நடைபெற்று வரும் நிலையில், நாடாளுமன்றத்தில் ஏற்பட்டுள்ள இந்த முட்டுக்கட்டை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படிங்க: டெல்லியில் உச்சகட்ட பரபரப்பு! நாடாளுமன்ற நுழைவாயில்கள் அதிரடியாக மூடல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share