நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்.. SIR, தேசிய பாதுகாப்பு குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் உறுதி!
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று டிசம்பர் 1 ஆம் தேதி தொடங்குகிறது. காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதங்களை எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
கூட்டத்தொடருக்கு முந்தைய நாளான நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், எதிர்க்கட்சிகள் SIR குறித்து விவாதிக்க வேண்டும் என்று ஒருமனதாகக் கோரியதால், இன்று கடுமையான விவாதங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், நாடாளுமன்றம் சுமூகமாகச் செயல்பட வேண்டும் என்றும், எதிர்க்கட்சிகளுடன் தொடர்ந்து விவாதங்கள் நடத்தப்படும் என்று அரசு தரப்பில் கூறியுள்ளது.
அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, கூட்டத்தொடர் நேர்மறையாக இருந்ததாகக் குறிப்பிட்டார். ஒரு ஜனநாயகத்தில், முறையற்ற விவாதங்களால் முட்டுக்கட்டை ஏற்படுவது சகஜம்தான். இதுபோன்றபோதிலும், சபையில் முட்டுக்கட்டையை உருவாக்காமல், நமது கருத்துக்களை வெளிப்படுத்தி, நமது எதிர்ப்பைப் பதிவு செய்ய அனைவரும் முடிவு செய்தால், சபை தடையின்றிச் செயல்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். மேலும், SIR பிரச்சினையை எழுப்பியதன் மூலம் அனைத்து எதிர்க்கட்சிகளும் நாடாளுமன்றத்தைச் சீர்குலைக்க விரும்புகின்றன எனக் கூறுவது நியாயமில்லை என்றும், பல தலைவர்கள் நாடாளுமன்றத்தை நடத்தவே விரும்புகிறார்கள் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
மறுபுறம், பீகார் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பெற்ற மகத்தான வெற்றியால் உற்சாகமடைந்துள்ள மத்திய அரசு, இந்தக் கூட்டத்தொடரில் பல முக்கியமான மசோதாக்களை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், SIR விவகாரம், டெல்லி குண்டுவெடிப்புக்குப் பிந்தைய தேசியப் பாதுகாப்புச் சவால்கள், டெல்லி காற்று மாசுபாடு, வெளியுறவுக் கொள்கை, விவசாயிகளின் அவல நிலை, பணவீக்கம் மற்றும் வேலையின்மை உள்ளிட்ட பல அதிமுக்கியத் தலைப்புகள் குறித்து விவாதங்களை எழுப்ப உத்தி வகுத்துள்ளன.
இதையும் படிங்க: 2 நாள் பயணம்..!! இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின்..!! காரணம் இதுதான்..!!
இந்தக் கூட்டத்தில் அரசு சார்பில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், சுகாதார அமைச்சர் ஜே.பி. நட்டா, நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு, நாடாளுமன்ற விவகாரத் துறை இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் காங்கிரஸ் தலைவர்கள் பிரமோத் திவாரி மற்றும் கொடிகுன்னில் சுரேஷ், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் டெரெக் ஓ’பிரையன், சமாஜ்வாதி கட்சித் தலைவர் ராம் கோபால் யாதவ், திமுகவின் திருச்சி சிவா மற்றும் பல அரசியல் முன்னணித் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: 200 இந்தியர்களை நாடு கடத்தியது அமெரிக்கா..!! இதுல ஒரு கேங்ஸ்டர் இருக்காரு..!! யார் தெரியுமா..??