இன்று கூடுகிறது நாடாளுமன்றம்! - குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்குகிறது பட்ஜெட் கூட்டத்தொடர்!
இந்திய நாடாளுமன்றத்தின் 2026-27-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 11 மணிக்குத் தொடங்குகிறது.
நாடாளுமன்றத்தின் மிக முக்கியமான பட்ஜெட் கூட்டத்தொடர், இன்று (புதன்கிழமை) குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அவர்களின் உரையுடன் முறைப்படி தொடங்குகிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்த அரசின் கொள்கை விளக்கங்களை உள்ளடக்கிய குடியரசுத் தலைவரின் உரைக்குப் பிறகு, கூட்டத்தொடர் அதன் அடுத்தக்கட்ட பரபரப்பை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டு கட்டங்களாக நடைபெறும் கூட்டத்தொடர்: வரும் ஏப்ரல் மாதம் 2-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தொடரை, இரண்டு கட்டங்களாக நடத்த நாடாளுமன்றக் குழு முடிவு செய்துள்ளது. முதல் கட்டக் கூட்டத்தொடர் இன்று தொடங்கி பிப்ரவரி மாதம் 13-ஆம் தேதி வரை நடைபெறும். அதனைத் தொடர்ந்து சிறு இடைவேளைக்குப் பிறகு, இரண்டாம் கட்டக் கூட்டத்தொடர் மார்ச் மாதம் 9-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 2-ஆம் தேதியுடன் நிறைவடையும். ஒட்டுமொத்தமாக 30 அமர்வுகள் திட்டமிடப்பட்டுள்ள இந்தக் கூட்டத்தொடரில், நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான பல முக்கிய மசோதாக்களை விவாதத்திற்கு எடுத்து நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
கூட்டத்தொடரின் மிக முக்கிய நிகழ்வான 2026-2027-ஆம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை, வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இதன் மூலம் 9-வது முறையாகப் பட்ஜெட் தாக்கல் செய்யும் நிதியமைச்சர் என்ற பெருமையை அவர் பெறுகிறார். பட்ஜெட் தாக்கலைத் தொடர்ந்து, பிப்ரவரி 2 முதல் 4-ஆம் தேதி வரை குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது அனல் பறக்கும் விவாதங்கள் நடைபெறும் எனத் தெரிகிறது.
இதையும் படிங்க: நாடாளுமன்றத்தில் புதிய விதிமுறை: இனி இருக்கையில் அமர்ந்தால் மட்டுமே எம்.பி.க்களுக்கு அட்டெண்டன்ஸ்!
புதிய வருமான வரிச் சட்டம்-2025 ஏற்கனவே அமலுக்கு வந்துள்ள நிலையில், இந்த பட்ஜெட்டில் வரி செலுத்துவோருக்குப் பெரிய அளவிலான சலுகைகள் அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு மாதச் சம்பளம் பெறுபவர்களிடையே நிலவுகிறது. உலகளாவிய பொருளாதார மாற்றங்களைக் கருத்தில் கொண்டு, நடுத்தர வர்க்கத்தினரின் கைகளில் கூடுதல் பணம் புழங்கும் வகையில் வரிவிலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர். மக்களின் வாங்கும் திறனை அதிகரிக்கவும், வரி நடைமுறைகளை மேலும் எளிமையாக்கவும் இந்த பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: திரவுபதி முர்முவை நேரில் சந்தித்தார் சி.பி ராதாகிருஷ்ணன்..!! புத்தாண்டு வாழ்த்துக்கள் பரிமாற்றம்..!!