தனிக்கச்சேரி நடத்தும் பவன் கல்யாண்!! அப்செட்டில் சந்திரபாபு! ஆந்திர அரசியலில் அதகளம்!
தலைப்புச் செய்திகளில் பவன் கல்யாண் மீண்டும் இடம்பெற துவங்கி உள்ளார். ஆனால், பல்வேறு விவகாரங்களில் அரசுக்கு எதிராக அவர் குரல் கொடுப்பது கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துவதோடு, அரசுக்கும் தர்ம சங்கடத்தை உண்டாக்குகிறது.
தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாரான பவன் கல்யாண், ஆந்திரப் பிரதேசத்தின் துணை முதல்வராகப் பதவியேற்று ஐந்து மாதங்களே ஆனதாலும், அரசியல் களத்தில் தனித்து நிற்கிறார். சாதாரண அரசியல்வாதியாக இல்லாமல், அறநெறி காவலராகவும், மக்களின் பாதுகாவலராகவும் தன்னை நிலைநிறுத்திக் கொள்பவர். ஆனால், பல்வேறு விவகாரங்களில் ஆளும் கூட்டணி அரசுக்கு எதிராக குரல் கொடுப்பது, முதல்வர் சந்திரபாபு நாயுடுவை தர்மசங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. இது கூட்டணி கட்சிகளிடையேயான உறவை சோதித்துக் கொண்டிருக்கிறது.
2024 சட்டசபைத் தேர்தலில், தெலுங்கு தேசம் (டிடிபி), ஜனசேனா, பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. சந்திரபாபு நாயுடு முதல்வரானதும், ஜனசேனா தலைவர் பவன் கல்யாணை துணை முதல்வராக்கினார். கூட்டணித் தர்மத்தின்படி இது நடந்தாலும், தனிப்பெரும்பான்மையுடன் வென்ற டிடிபி இந்த முடிவை எளிதாக ஏற்றுக்கொண்டது. துணை முதல்வரானதும், பவன் கல்யாண் பரபரப்பாகப் பணியாற்றினார். ஆனால், சில மாதங்கள் அரசியல் களத்தில் 'காணாமல்' போயிருந்தார். இப்போது, தலைப்புச் செய்திகளில் மீண்டும் இடம்பெறத் தொடங்கியுள்ளார்.
பவன் கல்யாணின் சமீபத்திய நடவடிக்கைகள் கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. பொது மக்களுக்கு எதிரான போலீஸார் செயல்பாடுகளை அவர் கண்டித்து வருகிறார். மக்களின் குறைகளை வெளிப்படையாகக் கையாள வேண்டும், நிர்வாகத்தில் பொறுப்புணர்வு இருக்க வேண்டும் என அரசை வலியுறுத்துகிறார். ஊழல், அரசுத் திட்டங்களில் குறைபாடுகள், தவறான நிர்வாகம் போன்றவற்றுக்கு எதிராகப் பேசி, சீர்திருத்தங்களை வலியுறுத்துகிறார். இது கூட்டணி கட்சிகளை அடிக்கடி தர்மசங்கடத்தில் ஆழ்த்துகிறது.
இதையும் படிங்க: ஆஸ்., வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை: அவங்களுக்கு இது ஒரு பாடம்..!! ம.பி அமைச்சரின் சர்ச்சை கருத்து..!!
திரையுலக சூப்பர் ஸ்டாராக இருப்பதால், ஊடக கவனம் அதிகம் பெறுவதும், அவர் சுட்டிக்காட்டும் பிரச்னைகளுக்கு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தையும் ஏற்படுத்துகிறது. சமீபத்தில், மேற்குக் கோதாவரி மாவட்டத்தில் உள்ள பீமாவரத்தில், போலீஸ் துணை கண்காணிப்பாளர் ஜெயசூர்யா 'ரம்மி, போக்கர்' கிளப்புகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாகவும், அரசியல் தலைவர்களின் பெயரைப் பயன்படுத்தி கட்டுப்பஞ்சாயத்து செய்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதை அறிந்த பவன் கல்யாண், அவருக்கு எதிராக விரிவான அறிக்கை அளிக்கும்படி மாவட்ட எஸ்பி மற்றும் மாநில டிஜிபிக்கு உத்தரவிட்டார். இது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றாலும், அரசை தடுமாறச் செய்தது.
அதிருப்தியில், முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்துறை அமைச்சர் அனிதா, டிஜிபி ஆகியோருடன் அவசர ஆலோசனை நடத்தி, துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டார். சில மாதங்களுக்கு முன், பவன் கல்யாணின் சொந்தத் தொகுதியான பிதாபுரத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டபோது, உள்துறை அமைச்சர் அனிதாவுக்கு நேரடியாக எச்சரிக்கை விடுத்தார். "அனிதா செயல்படத் தவறினால், உள்துறையை நானே கையேத்துவேன்" எனக் கூறினார். இது டிடிபி நிர்வாகிகளை அதிர்ச்சியடையச் செய்தது.
அரசியல் அமைப்பின்படி, துணை முதல்வர் பதவிக்கு கூடுதல் அதிகாரங்கள் இல்லை. முதல்வருக்கு இணையாகவே அது. ஆனால், பவன் கல்யாண் முதல்வர்போலச் செயல்படுவது கூட்டணியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அரசுத் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது, நிர்வாகத் தவறுகளைத் தவிர்ப்பது குறித்து அவர் பேசுவது பொதுமக்களிடம் நல்ல வரவேற்பைப் பெறுகிறது. தனிப்பட்ட நடத்தை, மத அனுசரிப்புகள் மூலம் இளைஞர்களிடம் பிரபலமானவர், மரபு-கலாச்சார காவலராகவும் தன்னை அறிமுகப்படுத்துகிறார்.
மேலும், முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது மகன், அமைச்சர் நாரா லோகேஷை கட்சி-ஆட்சியில் முன்னிலைப்படுத்தி வருகிறார். எதிர்காலத்தில் லோகேஷுக்கு எதிராகப் போட்டியிடும் நோக்கில், பவன் கல்யாண் ஆந்திர அரசியலில் தனி இடத்தை உருவாக்கி வருவதாகக் கூறப்படுகிறது. சமீப சம்பவங்களில், பவன் கல்யாண் அரசு கூட்டங்களைத் தவிர்த்து, கட்சி நிகழ்ச்சிகளில் ஈடுபடுவது, லோகேஷுடனான வேறுபாடுகளைத் தெரிவிப்பதாகப் பார்க்கப்படுகிறது. ஜனசேனா ஆதரவாளர்கள் பவன் கல்யாணை அடுத்த முதல்வராக எதிர்பார்க்க, டிடிபி லோகேஷை வாரிசாகக் காண்கிறது.
இத்தகைய நடவடிக்கைகள் கூட்டணியின் எதிர்காலத்தைப் பற்றி கேள்விகளை எழுப்புகின்றன. பவன் கல்யாணின் 'மக்கள் ஆதரவு' அரசியல், சந்திரபாபு நாயுடுவின் 'நிர்வாக முயற்சிகளை' சவால் விடுகிறதா? ஆந்திர அரசியல் களத்தில் இந்தப் போட்டி எப்படி முடியும் என்பது கவனிக்கத்தக்கது.
இதையும் படிங்க: அசத்தல் அமெரிக்கா ட்ரிப்!! அனைத்து கட்சி எம்.பிக்களுக்கு வலை! மோடி பலே ஐடியா!