"எங்களுக்கே உத்தரவா?" மனுதாரரின் செயலால் உச்சநீதிமன்றத்தில் பரபரப்பு..!!
இருப்பினும், நீதிபதிகள் மனுதாரர் மீது உடனடியாக எந்த ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்காமல், வழக்கின் சாராம்சத்தை அமைதியாக ஆராய்ந்தனர்.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின்போது ஒரு மனுதாரர் நீதிபதிகளிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல் பிரதாப் என்ற மனுதாரர், நீதிபதிகளுக்கு நேரடியாக ‘உத்தரவு’ பிறப்பிப்பதாகக் கூறி, ஆவணங்களை வீசி எறிந்து அவதூறாகப் பேசியதால் நீதிமன்றம் அதிர்ச்சியில் உறைந்தது.
பிரபல் பிரதாப், லக்னோவில் உள்ள விகாஷ் நகர் உதவி காவல்துறை ஆணையர் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யக் கோரி முதலில் உள்ளூர் காவல்துறையில் புகார் அளித்தார். ஆனால் காவலர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், லக்னோ ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தை நாடினார். அங்கும் நிவாரணம் கிடைக்காததால் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவையும் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார் பிரபல் பிரதாப்.
இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கே.வி. விஸ்வநாதன் மற்றும் அலோக் அராதே அமர்வில் இந்த மனு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தானே நீதிமன்றத்தில் ஆஜரானார். விசாரணை தொடங்கியதும் அவர், “மிஸ்டர் நீதித்துறை ஊழியரே… லக்னோ விகாஷ் நகர் உதவி போலீஸ் ஆணையர் மீது வழக்குப் பதிவு செய்ய நீங்கள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். நான் உங்களுக்கு ஆர்டர் போடுகிறேன்” என்று ஆக்ரோஷமாகக் கூறினார்.
இதையும் படிங்க: கரூர் உயிரிழப்பு வழக்கு: தவெக மேல்முறையீட்டு மனு ஜூலை 13-ல் உச்சநீதிமன்றத்தில் விசாரணை!
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நீதிபதி விஸ்வநாதன், “நீங்கள் எங்களுக்கு ஆர்டர் போடுகிறீர்களா?” என்று கேள்வி எழுப்பினார். பதிலுக்கு மனுதாரர் எந்த விளக்கமும் அளிக்காமல், தன் கையில் இருந்த வழக்கு ஆவணங்களை நீதிமன்றத்திற்குள் தூக்கி வீசினார். மேலும், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி உட்பட நீதிபதிகளை விமர்சித்து அவதூறான கருத்துகளைத் தெரிவித்தார்.
உடனடியாக நீதிமன்ற பாதுகாவலர்கள் உள்ளே வந்து பிரபல் பிரதாப்பை வெளியே அழைத்துச் சென்றனர். இந்தச் சம்பவம் உச்சநீதிமன்ற வளாகத்தையே பரபரப்பில் ஆழ்த்தியது. இருப்பினும், நீதிபதிகள் மனுதாரர் மீது உடனடியாக எந்த ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்காமல், வழக்கின் சாராம்சத்தை அமைதியாக ஆராய்ந்தனர்.
பின்னர் நீதிபதி விஸ்வநாதன், “மனுதாரர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க நாங்கள் முன்வரவில்லை. அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தள்ளுபடி உத்தரவில் தலையிடுவதற்கு எந்தச் சரியான காரணங்களும் இல்லை. எனவே இந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என்று அதிரடியாக உத்தரவிட்டார்.
இந்தச் சம்பவம் நீதிமன்ற அமைதியை பாதுகாக்கும் வகையில் நீதிபதிகள் காட்டிய பொறுமைக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. அதே சமயம், நீதிமன்றத்தின் கண்ணியத்தை மீறும் செயல்களுக்கு எதிராக எதிர்காலத்தில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்ற கருத்தும் வலுத்து வருகிறது.
இதையும் படிங்க: அரசு மருத்துவர்கள் தனியார் மருத்துவப் பணியில் ஈடுபடக் கூடாது..!! அதிரடி காட்டிய சுப்ரீம் கோர்ட்..!!